சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் செய்வதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, ஆகஸ்டு 24ந்தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கையின்போது, நகராட்சி சார்பில் கொள்கை விளக்க கையேடு வெளியிடப்பட்டது. அப்போது உரையாற்றிய அமைச்சர் கே.என் நேரு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தாம்பரம், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும், 9 பேரூராட்சிகள், நகராட்சிகளாக மாற்றப்படுவது உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையடுத்து, செப்டம்பர் 12ந்தேதி மாநகராட்சிக்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி,
தென்காசி மாவட்டத்தில் – சுரண்டை ,
திருநெல்வேலி மாவட்டம் – களக்காடு,
கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை
காஞ்சிபுரம் மாவட்டம் – குன்றத்தூர், மாங்காடு,
விழுப்புரம் மாவட்டம் – கோட்டக்குப்பம்,
இராணிப்பேட்டை மாவட்டம் – சோளிங்கர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம்-கூடுவாஞ்சேரி உட்பட 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.