சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நிவாரணப்பணிகள் குறித்து, தமிழக எதிர்க்கட்சித்தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (16-04-2020),  கூட்டணிக் கட்சித்தலைவர்களுடன் ’ காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 11 பேர் கலந்துகொண்டனர்.  இதில், ஒவ்வொரு ரேசன்கார்டுதாரர்களுக்கு ரூ.5ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும், கொரோனாவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்பன உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

தீர்மானங்கள் விவரம்:

இரங்கல் தீர்மானம்:

“கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ்” என்ற கொடுமையான “கொரோனா நோய்த்” தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை ஒட்டுமொத்தமாக உலக நாடுகளில் 1,34,720 பேரும், இந்தியாவில் 414 பேரும், தமிழ்நாட்டில் மட்டும் 14 பேரும் மரணமடைந்துள்ளனர்.

மரணமுற்றோர் அனைவர்க்கும்; அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும்; அவர்தம் குடும்பத்தார்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 1

கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம்

இயற்கைப் பேரிடரா அல்லது மனிதப் பேரிடரா என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு, ஒட்டுமொத்த மனித குலத்தையே சவாலுக்கு அழைத்து, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்றினால் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 1,242 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்; இந்த நோயால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பரிவுத் தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி மனித நேயம் காத்திட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறத

தீர்மானம்: 2

பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வுகள்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம்

வரலாறு காணாத இந்தக் கொடிய நோயின் கோரப் பிடியிலிருந்து மக்களை மீட்டுப் பாதுகாக்க, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், கூட்டுறவுப் பணியாளர்கள், காவல்துறையினர் என தங்களின் இன்னுயிர் பற்றிக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் தன்னலமற்ற சேவை புரிந்து வருவோருக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மனப்பூர்வமான நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தூய்மைப் பணியாளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்லும்போது உரிய சமூக இடைவெளி விட்டு அமர வைப்பதில்லை என்றும், அவர்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட உரிய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுகிறது. எனவே, கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் உரிய – தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு சிறப்பூதியம் மற்றும் சிறப்பு ஊதிய உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், பணியின் போது உயிரிழக்க நேரிடும் ஒவ்வொரு ஊழியரின் குடும்பத்திற்கும் தற்போது அரசு அறிவித்துள்ள 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை மிக மிகக் குறைவு என்பதால் – ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 3

உபகரணங்கள் கொள்முதலில் மேலும் தாமதத்தைத் தவிர்த்திடுக!

நாளுக்கு நாள் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து – மக்கள் அச்சத்தில் இருப்பதால், தற்போது முதலமைச்சர் கூறியுள்ள 32,371 தனிமை வார்டுகளும், 5,934 அவசரச் சிகிச்சை வார்டுகளும் போதாது என்றும், மேலும் இந்த நோயின் பிரச்சினையே “மூச்சுத்திணறல்” என்பதால் 3,371 வென்டிலேட்டர்கள் முற்றிலும் போதாது என்றும் இக்கூட்டம் கருதுகிறது. மருத்துவ உட்கட்டமைப்பு குறித்து மருத்துவர்களும், நிபுணர்களும்கூட இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள். ஆகவே மாவட்டந்தோறும், காலியாக உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் கொரோனா நோய்த் தொற்று படுக்கைகள் தயார் நிலையில் வைப்பது மிக அவசியமும் – அவசர முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகிறது.

ஜனவரியில் கொள்முதல் செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்களையும், ஆரம்ப கட்ட நோய் அறிகுறியைக் கண்டுபிடிக்கும் “விரைவு பரிசோதனை கருவிகளையும் (Rapid Test Kits)” இதுவரை அரசு பெற முடியவில்லை என்பதும் – அந்தக் கொள்முதலில் ஏற்படும் காலதாமதம் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முழுமையாக முடக்கியுள்ளது என்பதும் வேதனையளிக்கிறது.

“தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல்” “தனிமைப்படுத்திக் கொள்ளுதல்” “ஊரடங்கு” போன்றவை மட்டும் கொரோனா நோய்த் தொற்றுக்கான தீர்வல்ல என்பதையும் – “அதிக எண்ணிக்கையில் பரிசோதனை – நோயால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொண்டவர்களை முழுவதுமாகக் கண்டறிவது” ஆகியவையும் நோய்ப் பரவல் தடுப்பிற்கு உரிய தீர்வு என்பதையும் உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் இரண்டாவது கட்டமாக 03.05.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையிலும், மருத்துவ உபகரணங்களுக்காகவும், நோய் கண்டறியும் கிட்-களுக்காகவும் தமிழக அரசு மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து கால வரையறையின்றிக் காத்திருப்பதும் – அதை மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது. ஆகவே தமிழகத்திற்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை, போர்க்கால அடிப்படையில் மாநில அரசே கொள்முதல் செய்யவும், இதுவரை கொள்முதல் செய்யப்பட்டவற்றை உடனே பெறவும் மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 4

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சிறப்பு நிவாரணமாக 5,000 ரூபாய் வழங்கிடுக!

கொரோனா நோய்த் தொற்று அண்டை மாநிலமான கேரளாவில் முதலில் ஜனவரி 30-ஆம் தேதியும் – தமிழ்நாட்டில் முதல் கொரோனா நோய்த் தொற்று 07.03.2020 அன்றும் கண்டுபிடிக்கப்பட்டும், அ.தி.மு.க அரசு இந்த நோய்த் தொற்றின் கடுமை குறித்து எவ்வித கவலையும் கொள்ளாமல் – மார்ச் மாதம் முதல் மாவட்டந்தோறும் கூட்டத்தைக் கூட்டி அரசு விழாக்களை நடத்துவதில் ஆர்வம் காட்டி வந்தது. பிரதான எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்தும், “சுய ஊரடங்கு” கடைப்பிடிக்கப்பட்ட பிறகும்கூட – அரசு, பல லட்சம் மாணவர்களை “பிளஸ் டூ” தேர்வு எழுத வைத்தது. நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனவரி மாதத்திலிருந்து அரசுக்குப் போதிய கால அவகாசம் இருந்தும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வந்தது வேதனைக்குரியது. பின்னர், மார்ச் 22-ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட்ட “சுய ஊரடங்கு”, மார்ச் 25-ஆம் தேதி முதல் “21 நாட்கள் ஊரடங்காக”த் தொடரப்பட்டது.

ஊரடங்கு காலத்தில் முதலமைச்சரின் கணக்குப்படி 35.89 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மற்ற வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஏற்பட்ட வருமான, வாழ்வாதார இழப்பு, ஏழை – எளிய – நடுத்தர மக்கள் படும் இன்னல்கள், சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட அனைத்து வகை தொழில்களுக்கும் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு – இவற்றால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் ஏற்பட்டுள்ள பேராபத்து – பெரும் பின்னடைவு ஆகியவற்றை இந்த அரசு உரிய அளவு புரிந்து கொள்ளவில்லை என்பதை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.

கடந்த காலப் பேரிடர்களில் நிதி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி விட்டு, எப்படி அ.தி.மு.க அரசு “வரும்போது வரட்டும்” என்று அமைதி காத்ததோ அதைப்போலவே, கொரோனா நோய்த் தொற்று விஷயத்திலும், பாய்ந்து காரியம் ஆற்றுவதை விடுத்து, மத்திய பா.ஜ.க அரசிடம் பயந்து பதுங்கி ஒடுங்கியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. மத்திய அரசிடம் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் “சிறப்பு மானியமாக”க் கோரி விட்டு, வெறும் 870 கோடியே 88 லட்சம் ரூபாய் மட்டும் அளித்துள்ள மத்திய அரசிடம் “கோரிய நிதியைப் பெற முடியாமலும்” – நியாயத்தைத் தட்டிக் கேட்க முடியாமலும் தவிப்பதற்கு இந்தக் கூட்டம் வருத்தம் தெரிவிப்பதுடன்;

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து – கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தி – மத்திய அரசிடமிருந்து போதிய நிதியைப் பெறுவதற்கும் – நோய்த் தடுப்புப் பணிகளில் அனைவரையும் அரவணைத்து ஒற்றுமையுடனும் முனைப்புடனும் செயல்படுவதற்கும் கூடத் தாமதித்துத் தயங்கி நிற்கும் அ.தி.மு.க அரசின் செயலுக்கு இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

முதல் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே முழு நிவாரணமும் போய்ச் சேராத சூழலில், தற்போது 03.05.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கினால் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் மேலும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஆகவே அவர்களின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவையை ஈடுகட்ட அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் தலா 5,000 ரூபாய் சிறப்பு நிவாரண உதவியாக வழங்கிட வேண்டுமென்றும், ஊரடங்கினைச் சரியாக நடைமுறைப்படுத்திடும் வகையில் அனைவருக்கும் அத்தியாவசியப் பொருட்களை வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கிட வேண்டும் என்றும் இந்த கூட்டம் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

மாநில அரசு கோரியுள்ள 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும் என்றும்; அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிவாரண உதவி வழங்குவதற்கு ஏற்ற நிதி உதவியை மத்திய அரசு வழங்கிட முன்வர வேண்டுமென்றும்; அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 5

உணவு வழங்க அனுமதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு வரவேற்பு!

“உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகள் வழங்கலாம்” என்று உயர்நீதிமன்றம் அளித்துள்ள மனித நேய உத்தரவினை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் மனதார வரவேற்கிறது. பொதுவாக, பேரிடரின் போது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது மனித குணம். “உடுக்கை இழந்தவன் கைபோல” மற்றவர் இடுக்கண் களைவது தமிழர் பண்பு. அரசு அறிவித்த நிவாரணங்கள் ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கான குறைந்தபட்ச தேவைகளைக்கூட நிறைவு செய்ய இயலாத சூழலில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், பொதுநல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், பாதிக்கப்படும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வது நம் நாட்டில் தொடரும் நடைமுறை.

இந்நிலையில், “உணவுப் பொருட்கள், அத்தியாவசிய சமையல் பொருட்கள் எதையும் நேரடியாக வழங்கக்கூடாது” என்று அரசு தடுப்பதும், மீறி வழங்கினால் “நடவடிக்கை” என்று அச்சுறுத்துவதும் மனிதநேயம் ஆகாது; ஜனநாயகம் அனுமதிக்காது. அ.தி.மு.க அரசின் உள்நோக்கம் கொண்ட இந்த செயலை ஒரு போதும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. 12.4.2020 அன்று பிறப்பித்த தடையுத்தரவிற்கு “விளக்கம்” என்ற பெயரில் முதலமைச்சர் 13.4.2020 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டாலும், ஏற்கனவே போட்ட தடையையே அந்த அறிக்கையும் சுட்டிக்காட்டிய நிலையில், கருணை அடிப்படையிலான உதவியைச் செய்திட உயர்நீதிமன்றத்தை அணுகியதன் அடிப்படையில், தற்போது வெளிவந்துள்ள தீர்ப்பு- அல்லல்படும் மக்களை அரவணைக்கும் அருமருந்தாகும்.

அரசியல் கட்சிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை மனதில் நிலை நிறுத்தி – குறிப்பாக கொரோனா தொற்றின் தன்மை உணர்ந்து – மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் வழக்கத்தைவிட மிக அதிகமான கவனத்துடன் “தனிமனித விலகலை” (Physical Distancing) கடைப்பிடித்து உணவு மற்றும் அத்தியாவசிய சமையல் பொருட்களைத் தேவைப்படும் இடங்களில் வழங்கிட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 6

மத்திய – மாநில அரசுகளுக்கான அணுகுமுறைகள்:

2019 டிசம்பர் மாதத்தில் “கொரோனா நோய்” தாக்குதலுக்கு சீன தேசம் உள்ளான போதும், 2020 ஜனவரி மாதத்தில் உலக சுகாதார நிறுவனம் “பொது சுகாதார” நெருக்கடி நிலைப்பிரகடனத்தை அறிவித்த பின்னரும், அவற்றை எச்சரிக்கை மணிகளாக எடுத்துக்கொள்ளாமல், மத்திய பா.ஜ.க அரசு அமைதி காத்தது. கொரோனா நோய் பாதிப்பிற்கு உள்ளானவர் முதன் முதலில் ஜனவரி 30-ஆம் தேதி கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும்கூட, இந்த நோயின் கொடூரத்தை மத்திய அரசு உணர்ந்து – நோய்த் தொற்று பரவி விடாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட முன்வரவில்லை. அமெரிக்க அதிபரின் இந்திய வருகை கொண்டாட்டத்திலும், மத்திய பிரதேச ஆட்சிக் கவிழ்ப்புக்காகக் காத்திருந்தும் – முக்கியமான காலகட்டத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட ஒத்திவைக்க மறுத்து – இறுதியில் தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற புறக்கணிப்பை அறிவித்த பிறகே நாடாளுமன்றத்தை முன் கூட்டியே முடித்துக் கொள்ள மத்திய பா.ஜ.க அரசு தாமதமாக முடிவு செய்தது.

மார்ச் 19-ஆம் தேதிதான் “சுய ஊரடங்கை” அறிவித்து – கொரோனா நோய்த் தொற்றின் தீவிரத்தை சிறிது சிறிதாகப் புரிந்து கொள்ள மத்திய அரசு முயற்சித்தது. ஆனாலும் “கை தட்டுவதிலும்” “லைட் வெளிச்சம் ஏற்படுத்துவதிலும் – ஒலி, ஒளிக் காட்சிகளில் காட்டிய ஆர்வத்தை, மாநிலங்கள் கோரும் நிதியை ஒதுக்குவதிலோ, நாடு முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதிலோ காட்டவில்லை என்பதை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது.

நாடாளுமன்றம் அனுமதித்து – உச்சநீதிமன்றமும் அங்கீகரித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தை இரு வருடங்களுக்கு மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது சட்டவிரோதமானது மட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை பறிக்கும் இந்த ஜனநாயக விரோத செயல் கண்டனத்திற்குரியது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியை தத்தமது தொகுதியில் கொரோனா நோய் ஒழிப்பு நடவடிக்கைக்கும் – தொகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்காகவும் செலவிட அனுமதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்த கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

கொரோனா நோயால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 1.5 சதவீதமாக குறையும் என்று தெற்காசிய நாடுகளுக்கான உலக வங்கி அறிக்கை எச்சரித்துள்ளது. இது கடந்த 29 வருடங்களில் இல்லாத அளவிற்கான இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி. ஏற்கனவே 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.1 சதவீதமாக இருந்த வேலை இல்லாத் திண்டாட்டம் தற்போதைய ஊரடங்கால் 23.4 சதவீதமாக அதிகரித்து விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வளவு தீவிரமான – கொடூரமான – மனித உயிர்களைக் கொத்துக் கொத்தாகப் பறிக்கும் தன்மை கொண்ட கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்கோ – பொருளாதாரச் சீரழிவை நிமிர்த்துவதற்கோ – மாநில அரசுகளுக்கு தகுந்த உதவி செய்வதற்கோ, மத்திய அரசு தொலை நோக்குப் பார்வையின்றி, இன்னும் தயங்கி நிற்பது ஏன் என்று வல்லுநர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்புகிறார்கள்.

இந்த நோயை சமாளிக்கத் தேவையான சுகாதார உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த அறிவிக்கப்பட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய், டிசம்பர் மாதம் வரையிலான மாநிலங்களின் பங்கான ஜி.எஸ்.டி நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி என எதையும் மத்திய அரசு உரிய காலத்தில் விடுவிக்காமல் மாநில அரசுகளை, வரலாறு காணாத இந்த நெருக்கடியிலும் வஞ்சித்து வருகிறது. மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து “பெயரளவிற்கு” 510 கோடி ரூபாயை மட்டும் தமிழகத்திற்கு வழங்கியிருக்கும் மத்திய அரசு – முதல் கட்டமாக மாநிலங்களுக்குத் தேவைப்படும் நிதியை ஒதுக்க மறுத்து வருகிறது. “மோசமான சுகாதாரப் பேரிடரை” மாநிலங்களே சமாளித்துக் கொள்ளட்டும் என்று கூட்டாட்சித் தத்துவத்தை கைவிட்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசு, கொரோனா நோய் சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை மட்டும் நாங்களே மையப்படுத்தி கொள்முதல் செய்து தருகிறோம் என்று கூறி – முதல் ஊரடங்கு முடியும் வரை எவ்வித மருத்துவ உபகரணங்களும் மாநிலங்களுக்கு வழங்காமல் இருப்பதற்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம், கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

ஆகவே மத்திய அரசிடம் உள்ள மாநிலங்களின் நிலுவைத் தொகை, மாநில பேரிடர் நிதி, சுகாதார பேரிடருக்கு ஒதுக்கப்பட்ட 15 ஆயிரம் கோடி நிதி உள்ளிட்டவற்றை மட்டுமின்றி – தமிழ்நாடு கேட்கும் நிதியுதவிகளை, மாநிலங்களிடையே பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் – ஆளாத மாநிலங்கள் என்ற பாகுபாடு காட்டாமல், நியாயமான முறையில் அளித்திடவும், மற்றும் கோரும் கடன் தொகை, சிறப்பு மானியங்கள் போன்றவற்றை, அரசியல் லாப – நட்டக் கணக்குப் பார்க்காமல் வழங்கிடவும் மத்திய அரசு உடனடியாக முன்வந்து அனைத்து மாநில மக்களும் இந்திய மக்களே – ஒரு தாய்ப் பிள்ளைகளே – எமது மக்களே என்ற பரந்த சிந்தனையுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சி தலைவர்களின் இந்தக் கூட்டம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

ஒரு குறிப்பிட்ட குழுவினரை மட்டும் தனிமைப்படுத்தாமல், அனைத்து மக்களுக்கும் சோதனை செய்து, நோய் தடுப்பு நடவடிக்கையை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற சிக்கலான சூழ்நிலையில் வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்வது மனிதாபிமானமற்ற செயல்கள் ஆகும். இதுபோன்ற நோயின் பார்வையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற எண்ணத்தோடு, நமது அணுகுமுறை இருக்க வேண்டும்.

கொரோனா நோய் பாதிப்பிலிருந்து கேரள மாநிலத்தை மீட்க அம்மாநில அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி – அதற்கான செயல்திட்டத்தைத் தயாரித்து, முற்போக்கான வழியில், செயல்படுத்தி, மாதிரி மாநிலமாக உருவாகி வருகின்ற வேளையில்; தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்காத மத்திய அரசை தட்டிக் கேட்கத் தைரியம் இல்லாமல் – யானைப் பசிக்கு சோளப்பொரி என்பது போல், வெறும் 3,280 கோடி ரூபாய் நிவாரணத் தொகையை ஒதுக்கி விட்டு முற்றிலும் செயலிழந்து நிற்பதற்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையை தெரிவித்து, மாநிலத்திற்குத் தேவையான நிதியை உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துப் பெற வேண்டும் என்றும், ஊரடங்கு 03.05.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் தேவையான நிவாரண உதவிகளைச் செய்திடவும், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டிடவும் உடனடியாகக் குறைந்த பட்சம் முதல் கட்டமாக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதற்கான செயல் திட்டம் ஒன்றை மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 7

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்ததற்கு கண்டனம்!

முதலமைச்சரும், அமைச்சர்களும், அதிகாரிகளும், ஆய்வு – ஆலோசனைக் கூட்டங்கள் என்ற பெயரில், “கூட்டம் கூட்டமாக” அமர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்; கேட்டால் அரசு தலைமைச் செயலகம் என்பார்கள்; அங்கே மட்டும் நோய்த் தொற்றுக்குத் தடை விதிக்கப் பட்டிருக்கிறதோ! ஆனால் அதே நேரத்தில் “ஊரடங்கை”யும், கொரோனா தொற்றையும் காரணம் காட்டி, தி.மு.க தலைமையில் நடைபெறவிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குத் தடை விதித்திருப்பதற்கு, இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கூட்டம் நடைபெறும் என்று உத்தரவாதம் கொடுத்ததையும், உள்நோக்கத்துடன் ஏற்க மறுத்து- கூட்டத்திற்கு அனுமதி மறுத்தது, வன்மம் நிறைந்த, ஜனநாயக விரோதச் செயலாகும்.

கடந்த காலங்களில் அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற “2015 சென்னை பெருவெள்ளம்” “2016 வர்தா புயல்” “2017 ஒகி புயல்” “2018 கஜா புயல்” உள்ளிட்ட பேரிடர்களின்போது செய்த மலிவான “அரசியலை” , இந்த “கொரோனா பேரிடரிலும்” அ.தி.மு.க. தொடர்ந்து செய்துவருகிறது. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒரே காரணத்தினாலே, “ஊரடங்கு உத்தரவு தனக்கோ, தன் அமைச்சர்களுக்கோ, அ.தி.மு.க.,விற்கோ இல்லை; அது எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தான்” என்ற அடிப்படையில் – சர்வாதிகார மனப்பான்மையுடன் முதலமைச்சர் செயல்படுவது, யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாத, ஆரோக்கியமற்ற அணுகுமுறை ஆகும். ஆகவே முதலமைச்சர், பேரிடர் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில்- அரசியலை நுழைக்காமல்- அனைத்துக் கட்சிகளையும், பொதுநல அமைப்புகளையும், தொண்டு நிறுவனங்களையும் – அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து, ஒற்றுமையுடன் ஒரே நோக்கில், மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 8

நிவாரண- பொருளாதார உதவிக்கு புதிய செயல் திட்டம் உருவாக்கிடுக!

விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஊரடங்கு உத்தரவால் கடும் பாதிப்புக்குள்ளாகி – வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். மத்திய – மாநில அரசுகளின் நிவாரணம் அவர்களின் வருமான இழப்பை எவ்விதத்திலும் “தற்காலிகமாக” ஈடுகட்டும் விதத்தில் கூட இல்லை. விளை பொருட்களை விற்க முடியவில்லை. நேரடி கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளின் நண்பனாக இல்லை. அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி – அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்பதால் தாய்மார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அரசுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம், சொத்து வரி, வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர கடன் தொகைகள் செலுத்த முடியவில்லை. வாடகைக்குக் குடியிருப்போர் வாடகை செலுத்த இயலவில்லை. பதிவு செய்யப்படாத அமைப்புசாரா தொழிலாளர்கள், வியாபாரிகள் அல்லது பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் எல்லாம் எந்த உதவியும் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், நலிவடைந்துள்ள சிறு, குறு தொழில்களுக்கும் தேவையான நிவாரண உதவிகள், சிறப்பு மானியங்கள் அளித்திடவும், மாநிலத்தில் தேக்க நிலையை எட்டி விட்ட தொழில் வளர்ச்சியை மீண்டும் முடுக்கி விடவும், தேவையான ஒரு விரிவான “நிவாரண- பொருளாதார” உதவிக்கான செயல் திட்டத்தை அ.தி.மு.க. அரசு உடனடியாக வகுக்க வேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

அதோடு, மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் வங்கிகள் ஒத்தி வைத்துள்ள கடன்களுக்கான வட்டியை முழுமையாக ரத்து செய்வது, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்வு பெற்றதாக அறிவிப்பது, தமிழகத்தில் வாழும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து உணவுகள் வழங்குவது, வெளிநாடுகளிலிருந்தும் – வெளி மாநிலங்களிலிருந்தும் தமிழகம் திரும்ப விரும்புவோர்களுக்கு உரிய ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செய்து கொடுப்பது, அகதிகளாக தமிழக முகாம்களில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்குவது, விசைத்தறித் தொழிற்சாலைகள் உள்ளிட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து – வேலையின்றி தவித்து வரும் ஏறத்தாழ 50 லட்சம் தொழிலாளர்களுக்கு உரிய நிதி உதவிகளை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் பட்டினிச்சாவுகள் நிகழாமல் தடுப்பதற்குத் தேவையான திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து அனைத்துத் தரப்பு மக்களையும் காப்பாற்றிட வேண்டும் எனவும், ஊரடங்கு நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக விடுவிப்பதோடு – இனிவரும் நாட்களில் வாகனங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசு கைவிட வேண்டும் என்றும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 9

“கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து விரைந்து விடுபடுவீர்” தமிழக மக்களுக்கு வேண்டுகோள்!

கடந்த மூன்று வாரங்களை அடுத்து, இரண்டாவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் – “தனிமனித சுகாதாரப் பாதுகாப்பு” “சமுதாயப் பாதுகாப்பு” ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், “ஊரடங்கு உத்தரவினை முழுமையாகக் கடைப்பிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவது”, “நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் உடனே மருத்துவர்களுக்குத் தெரிவிப்பது”, “சோப்பு மற்றும் சோப்பு நீர் கொண்டு கை கால்களை தொடர்ந்து சுத்தம் செய்வது”, “வெளியில் செல்லும் போது தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்வது” “ரேசன் கடை, காய்கறி, மளிகைக் கடைகளுக்கும், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொது வெளியில் செல்லும் போதும், தங்கள் இல்லத்தில் உள்ள சுப துக்க நிகழ்வுகளிலும் கட்டாயம் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பது” உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கொரோனா நோய்த் தொற்று குறித்து மத்திய – மாநில அரசுகள் அவ்வப்போது வழங்கிடும் நல்வாழ்வுக்கான அறிவுரைகளையும் முழுமையாகக் கடைப்பிடித்து தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், நாட்டையும் கொரோனா நோயின் கோரப்பிடியிலிருந்து விடுவித்துப் பாதுகாத்திட முன்வர வேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரையும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.