வெளிநாடுகளில் வாழும் மலையாள மக்கள் தொடர்பான விவகாரங்களை கவனிக்க ‘நோர்க்கா’ எனும் தனி இலாகா செயல்பட்டு வருகிறது.

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வெளிநாடுகளில் இருந்து கேரள மாநிலத்துக்கு திரும்பியுள்ள மலையாள மக்கள் குறித்த விவரங்களை அந்த இலாகா வெளியிட்டுள்ளது.

அதில் பல பரபரப்பு தகவல்கள் தெரிய வந்துள்ளன.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, விமான சேவை தொடங்கிய மே மாதத்துக்கு பின்னர், வெளிநாடுகளில் இருந்து கேரள மாநிலத்துக்கு 8 லட்சத்து 70 ஆயிரம் பேர் திரும்பி உள்ளனர் என ‘நோர்க்கா’ தெரிவித்துள்ளது.

இவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், கொரோனாவால் வேலை இழந்து சொந்த மண்ணுக்கு வந்துள்ளனர்.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த மலையாளிகளில் 13 லட்சத்து 27 ஆயிரம் பேர் கொரோனாவால், மீண்டும் கேரளாவுக்கு திரும்பி உள்ளனர் என மற்றொரு புள்ளி விவரம் கூறுகிறது.

இவர்களில் 3 லட்சத்து 12 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் இருந்தும், 3 லட்சத்து 11 ஆயிரம் பேர் கர்நாடகத்தில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.

ஆக மொத்தம் 22 லட்சம் மலையாளிகள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொரோனாவால், துரத்தப்பட்டு சொந்த பூமியான கேரளாவில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

– பா. பாரதி