சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7மணி தொடங்கியது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் உள்ள 14 ஆயிரத்து 573 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முதற்கட்ட வாக்குபதிவு 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1577 கிராம ஊராட்சி தலைவர், 12,252 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்களுக்காக 7, 921 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில், மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அப்போது, கொரோனா நோயாளிகள் பாதுகாப்பு கவச உடை அணிந்து தங்களது வாக்குகளைசெலுத்தலாம்.
வாக்குச்சாவடிகளில் காமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவை கண்காணிக்க கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளையும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேவைப்படும் போது அல்லது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அங்குள்ள நிலையை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்தே தெரிந்து கொள்ள வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.