தராபாத்

தராபாத் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத் நகரில் நம்பள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன., திடீரென அந்த குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு கட்டிடம் முழுவதும் கரும் புகை பரவியது.

இதனால் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் சுயநினைவை இழந்தனர். விபத்தில், 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்து உள்ளனர். மரணம் அடைந்தோரில் 2 சிறுமிகள், 4 பெண்களும் அடங்குவர்.

விபத்தில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். காவல்துறையினர் தமது முதல்கட்ட விசாரணையில், டிரம் ஒன்றில் வைத்திருந்த ரசாயன பொருட்கள் தீப்பிடித்து, கட்டிடத்தில் பரவியது எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துக்குத் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் இரங்கல் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து உள்ளார்.