நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரையும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றவியல் சதி, பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றங்களை உறுதிப்படுத்திய நீதிபதி ஆர். நந்தினி தேவி இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்றும் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அதன்படி, 9 பேருக்குமே சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனைகள்
- இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனைகள்
- மூன்றாம் குற்றவாளி சதீஷுக்கு 3 ஆயுள் தண்டனைகள்
- நான்காம் குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனைகள்
- ஐந்தாம் குற்றவாளி மணி எனும் மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனைகள்
- ஆறாம் குற்றவாளி பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை
- ஏழாம் குற்றவாளி ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனைகள்
- எட்டாம் குற்றவாளி அருளானந்தத்துக்கு ஒரு ஆயுள் தண்டனை
- ஒன்பதாம் குற்றவாளி அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இந்த பாலியல் வழக்கு காரணமாக, அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.
இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிமுக பின்புலம் இருப்பதாக தொடர்ந்து திமுக குற்றம் சாட்டி வந்தது, எனினும் அதை அதிமுக மறுத்தது.
ஆரம்பத்தில், உள்ளூர் போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர். பின்னர் தமிழக அரசு இந்த வழக்கை விசாரிக்க சிபி-சிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்கப்பட்டது.