சென்னை: கீழடியில் 8வது கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு பணி முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து 3 கட்டங்களாக தொல்லியல்துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டது. இதில் தமிழர்களின் பண்டைய காலத்தை பறைசாற்றும் பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், தொடர்ந்து அகழாய்வு பணிகளை முன்னெடுக்க தமிழகஅரசு முயற்சிகள் எடுத்து வந்தது
. இதற்கு மத்தியஅரசு ஒத்துழைக்காத நிலையில், தமிழகஅரசே அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதையடுத்து, 2018ம் ஆண்டு முதல் 4 கட்டங்களாக தமிழ்நாடு அரசுசார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. இநத் அகழாய்வின்போது, கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள், உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகின்றன. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று 8வது கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி, கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 8-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேட்டில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளையும், தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.