மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்து உள்ளது. வினாடிக்கு 6,522 கனஅடியில் இருந்து 17,937 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, குளம் குட்டைகள் நிரம்பி வருகின்றன. கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக, காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவும் அவ்வப்போது அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.
கடந்த மாதம் தொடக்கத்தில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் அளவை அதிகரித்த நிலையில், இடையில், குறைத்து வந்தது. இதற்கிடையில், மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் டெல்டா பாசனத்துக்காகதண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் மேட்டூர் அணையில், 100அடி வரை எட்டிய தண்ணீர் படிப்படியாக குறையத் தொடங்கியது. வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளதால், தற்போது, வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அதேவேளையில், மேட்டூர் அணைக்கு கடந்த இரு வாரமாக குறைந்த அளவிலேயே நீர் வந்து கொண்டிருந்தது. சுமார் 6500 கன அளவிலான நீர் வந்துகொண்டிருந்தது. ஆனால், நேற்று மாலை முதல் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது, மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,937 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
தற்போதைய நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.50 அடியாகவும், நீர்இருப்பு 52.08 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.