சென்னை,

ருத்துவ படிப்பில் தமிழக கல்வி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித உள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.

இதை எதிர்த்து  சிபிஎஸ்இ மாணவர் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்வதாக  சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் ஆணையை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வை  (National Eligibility and Entrance Test – NEET)  மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தியது.

தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தின்படி கற்பிக்கப்படுவதால், சிபஎஸ்இ நடத்தும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை ரத்து செய்தும், புதிய தரவரிசைப் பட்டியலைத் தயார் செய்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தனி நீதிபதி வழங்கிய இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.