பாட்னா: வெவ்வேறு அடையாள அட்டை மூலம்  பீகார் முதியவர் ஒருவர் 11முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட சம்பவம் தெரிய வந்துள்ளது.

பீகாரின் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரம்மதேவ் மண்டல். 84வயதான இவர், தான் 11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற அஞ்சல்துறை ஊழியரான பிரம்மதேவ் ஏற்கனவே 11முறை தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில், 12வது முறையாக  உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போட்டுக்கொள்ள சென்றபோது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார்.

தடுப்புசி எடுத்துக்கொள்வதறகாகவும், சுகாதார ஊழியர்களை ஏமாற்றுவதற்காக அவர் தனது நெருங்கிய உறவினர் களுடைய வெவ்வேறு அடையாள அட்டைகள் மற்றும் கைபேசி எண்களைப் பயன்படுத்தி 11முறை தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மண்டல் முதன்முதலாக பிப்ரவரி 13,2021 அன்று அவருக்கு முதல் டோஸ் ஊசி போடப்பட்டது. அதன்பிறகு, அவர் மார்ச், மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா ஒரு டோஸ் எடுத்துக்கொண்டார். செப்டம்பரில் அவர் தன்னுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களைப் பயன்படுத்தி 3 டோஸ்களைப் போட்டுக்கொண்டார். டிசம்பர் 30, 2021-க்குள் அவர் 11 டோஸ்களைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.