டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு 81% ஆதரவு  இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவினர் ஜனவரி 5ந்தேதி வெளிட்ட பொதுஅறிவிப்பின் படி, ஜனவரி 15 ஆம் தேதி வரை ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களில் 81 சதவிகிதம் பேர் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்தலாம் என  கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

தேர்தல் செலவினை குறைக்கும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு மத்தியஅரசு அடித்தளம் அமைத்து வருகிறது. இதற்கு, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தலாம் என பச்சைக்கொடி காட்டி உள்ளது. ஆனால்,  சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து,  முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாம் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கருத்து கேட்டு அறிக்கை தயாரித்துஅளிக்கும்படி மத்திய அரசு கோரியது.

இந்த குழுவினர் பல்வேறு கட்டங்களாக, சட்ட வல்லுநர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரிடம்  ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அறிவிப்பு வெளியிட்டப்பட்டது. இந்தியாவில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் மூன்றாவது கூட்டத்தைத் தொடர்ந்து, ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பின் படி, ஜனவரி 15 ஆம் தேதி வரை ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அதன்படி,  இந்த குழுவுக்கு வந்துள்ள சுமார்   20 ஆயிரத்திற்கு மேற்பட்ட கருத்துக்களில், பெரும்பாலானவை இந்த யோசனைக்கு ஆதரவாக இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி “ஒட்டுமொத்தமாக 20,972 கருத்துக்கள் பெறப்பட்டன, அவற்றில் 81% ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான யோசனையை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், 46 அரசியல் கட்சிகளிடம் இருந்தும் ஆலோசனைகள் கேட்கப்பட்ட நிலையில், இதுவரை 17 அரசியல் கட்சிகளிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளும் கமிட்டியால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரம், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ஓபி ராவத், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜி ரோகினி ஆகியோரை சந்தித்த ராம்நாத் கோவிந்த் ஆலோசனை நடத்தினார். இதேபோல் புகழ்பெற்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள், முன்னாள் சிஇசிகள் (CEC), இந்திய பார் கவுன்சில் தலைவர்கள் மற்றும் தொழில் அமைப்புகளான FICCI, ASSOCHAM மற்றும் CII ஆகியோருடனும் ஆலோசனை நடத்தப்பட்டது என்று அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தக் குழுவின் அடுத்த கூட்டம் ஜனவரி 27-ம் தேதி நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமைச்சகத்தால் செப்டம்பரில் அமைக்கப்பட்ட குழு, அதன் முதல் கூட்டத்தை அதே மாதத்தில் நடத்தியது, அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் இரண்டாவது கூட்டத்தை நடத்தியது. அதன் விதிமுறைகளின்படி, “மக்கள் சபை (லோக்சபா), மாநில சட்டமன்றங்கள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குமாறு குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.