மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகளில் 80% பேருக்கு அறிகுறிகள் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இன்று 440 பேர் அதிகரித்து பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 8068 ஆகி உள்ளது.  இன்று மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 19 அதிகரித்து மொத்தம் 342 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1118 பேர் குணமடைந்துள்ளனர்.  இன்று 42 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்

இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டோரில் கால்பங்கு மகாராஷ்டிராவில் உள்ளனர்.  இம்மாநிலத்தில் அதிக அளவில் மும்பை நகரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இது குறித்து மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, “தற்போது மாநிலத்தில் நிலவி வரும் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து வரும 30 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க உள்ளோம்.  இது குறித்த கணக்கெடுப்புக்களை நான் இன்று மாலை ஆய்வு நடத்த உள்ளேன்.

தற்போதுள்ள நிலையில் மருத்துவர்கள் தங்கள் சிகிச்சையகங்களை உடனடியாக திறந்து மற்ற நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும்.  குறிப்பாக டயாலிசிஸ் போன்றவற்றைத் தொடங்க வேண்டும்.  தற்போது ஊரடங்கு நிலவுவதால் மக்களில் சிலர் பொறுமை இழந்துள்ளனர்   ஆனால் தற்போதைய நிலையில் இதைத் தவிர வேறு வழி இல்லாத நிலை ஏறபட்டுள்ள்து.

மக்கள் அனைவரும் முகக் கவசத்துடன் நடமாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.  தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரில் 80% பேருக்கு எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை.   எனவே பாதுகாப்பை அலட்சியம் செய்ய வேண்டாம்.  கூட்டமாகக் கூட வேண்டாம்.  லேசாக ஜுரம், ஜலதோஷம்  இருந்தாலும் அவசியம் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளவும்” என அறிவித்துள்ளார்.