சிம்லா

மாசலப் பிரதேச மாநிலத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆகி உள்ளது.

கடந்த சில தினங்களாக இமாசல பிரதேசம், டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியானா, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலைகள் நிறைந்த இமாசல பிரதேசம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டு சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து முடங்கி உள்ளது.

சண்டிகர்-மணாலி மற்றும் சிம்லா-கல்கா நெடுஞ்சாலைகள் உட்பட 1,300 சாலைகள் நிலச்சரிவு காரணமாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது. இங்கு பெய்து வரும் கனமழை காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். பல வாகனங்கள் நிலச்சரிவில் சேதமடைந்துள்ளன.

மீட்புப் படையினர் பாதிக்கப்பட்டோரை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.  பள்ளிகளுக்கு 15-ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. அங்கு ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்குச் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டு உள்ளது.  இம்மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு நேற்று முன்தினம் குல்லு பகுதிக்கு சென்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட்டார்.