கடலூர்: கடலூர் ஆரகே கடற்கரையில்  பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்த 8 பைபர் படகுகள் தீப்பிடித்த எரிந்தது அந்தபகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. படகுகளில் மர்மநபர்கள் தீ வைத்து எரித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த  சம்பவம் கடலூர் அருகே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 படகுகள் மற்றும் வலைகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது,  பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்த பைபர் படகுகளில் மர்மநபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் மீனவர்கள் கிராமத்தில் இடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.


கடலூர் அடுத்த துறைமுகம் அக்கரை கோரி பகுதியில் தினமும் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். அந்தவகையில் நேற்று வழக்கம் போல் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த படகுகள் நேற்று நள்ளிரவில் திடீரென  தீ பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த பைபர் படகுகளை தண்ணீர் ஊற்றி நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், அக்கரை கோரி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், குப்புசாமி, அன்பு, மேகநாதன், பாலமுருகன், பவலேஷ், சாமிநாதன், மகேந்திரன் ஆகிய 8 பேரின் பைபர் படகுகள் மற்றும் வலைகள் தீயில் எரிந்து சேதமடைந்தது தெரிய வந்துள்ளது. இது பற்றிய கடலூர் துறைமுகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயில் கருகி எரிந்த படகுகள் மற்றும் வலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில்

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மர்மநபர்கள் படகுகளை தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்பில் படகுகள் மற்றும் வலைகள் எரிந்ததால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாக உள்ளது.

இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? முன் விரோதம் காரணமாக தீ வைத்தார்களா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.