சென்னை:
சென்னையில் பயிற்சி  பெண் காவலர்கள்  8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, பயிற்சி வகுப்புக்கு வரும் காவலர்கள் அனைவரும் சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும் என்றும், அதன் முடிவு தெரிந்த பின்புதான்  பயிற்சி வகுப்பில் சேர்க்கப்படுவார்கள் என்றும் உத்தரவிடப்பட்டுள்து.

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றுதீவிரமடைந்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பல காவல்துறையினருக்கும் கொரோனா  தொற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில்,  தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்க காவல்துறை முடிவு செய்தது. அதன்படி, புதிதாக தேர்வான அனைவரும் மாவட்ட கண்காணிப்பு மற்றும் ஆயுதப்படை பயிற்சி மையத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அப்படி பயிற்சி வகுப்புக்கு வரும் காவலர்கள் அனைவரும் சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகுதான் பயிற்சி வகுப்பில் சேர்க்கப்படுவார்கள் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
அதையடுத்து, கடந்த 3-ம் தேதி பயிற்சிக்கு வந்தவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 8 பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.