சென்னை; 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் இரவு நேரங்களில் சென்னை சாலைகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னையின் பல சாலைகள் இரவு நேரங்களில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது   78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம்  இரவு நேரங்களில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியால்,  387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கிய  பேருந்து சாலைகளில் இரவு நேரங்களில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் துப்புறவு பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

சாலைகளில் தேங்கும் குப்பைகளால்,  வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், நாளடைவில் சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் சென்று அடைப்பையும் ஏற்படுத்து கின்றன. இதை தடுக்கும் வகையில்,  போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்காள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, பெருநகர சென்னை மநாகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் (பகுதி அளவு) ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய சென்னை என்விரோ என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் 15 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள்,

தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் (பகுதி அளவு) மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 16 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள்,

தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் சார்பில் 47 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள்,

என மொத்தம் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் பேருந்து சாலைகளில் மட்டும் தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பேருந்து சாலைகளுடன் கூடுதலாக மாநகரின் முக்கியமான உட்புறச் சாலைகளையும் இந்த வாகனங்களை கொண்டு சுத்தம் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.