டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளியையொட்டி 78 நாட்கள் சம்பளம் போனஸ் வழங்கவும், நாடு முழுவதும்  7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கவும்  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த  மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது,

மத்தியஅரசு ஆண்டுதோறும், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருகிறது. அதுபோல, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, போனஸ் வழங்க முடிவு செய்துள்ளது.  போனஸை கணக்கீடு செய்ய  ஒரு குழு உருவாக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் பேரில் போனஸ் வழங்கப்படுகிறது. அந்த குழுவின் பரிந்துரைப்படி,, நடப்பாண்டு  ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸ் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை  முடிவு செய்துள்ளது.

மாதம் 7 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் போனஸ் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தமாக கணக்கிட்டால் 78 நாட்களுக்கு ஒவ்வொரு ஊழியருக்கும் 17 ஆயிரத்து 951 ரூபாய் போனஸாக கிடைக்கும்.

ரயில்வே ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த போனஸ் வழங்கப்படுகிறது.  இதன்மூலம் 11.58 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர். இதற்காக 2 ஆயிரத்து 81 ஆயிரம் கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  4 ஆயிரத்து 445 கோடி ரூபாய் செலவில் நாட்டின் 7 இடங்களில் ‘பிஎம் மித்ரா’ திட்டத்தின்கீழ் மெகா ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைப் பூங்கா அமைக்க மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4,445 கோடி செலவிடப்படும். தனியார் முதலீடுகளும் அனுமதிக்கப்படும். இதன்மூலம் ஜவுளி உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி வளர்ச்சி ஏற்படும். மேலும், லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளும் உருவாகும். பெரிய அளவில் அமைக்கப்படும் இந்த ஜவுளிப் பூங்காக்கள், அந்நிய முதலீடு களை பெருமளவில் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021-22 நிதி ஆண்டில் ஜவுளி ஏற்றுமதி மூலம் 4,400 கோடி டாலர் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு ஜவுளி ஏற்றுமதியை எட்ட இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.