சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் , ஒரே நேரத்தில் 5 நடைமேடைகளில் 77 ஆம்னி பேருந்துகளை இயக்க வசதி உள்ளது என்றும், மேலும் 170 பேருந்துகள் நிறுத்தும் அளவுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க உரிமையாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய தயார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டன.
நேற்று இரவு முதல் சென்னையிலிருந்து தெற்கு நோக்கி (கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம் நீங்கலாக) செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றுவதோ, இறக்குவதோ அனுமதிக்கப்படாது. அதற்கு ஏற்றார்போல் ரெட் பஸ், அபி பஸ் உள்ளிட்ட ஆம்னி பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை செய்திவுடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறி பயணிகளுக்கு உரிய தகவலை வழங்காமல் அவர்களை தேவை இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகளின் ஆபரேட்டர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படியும் மட்டுமல்லாமல் கிரிமினல் சட்டங்களின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆம்னி பேருந்துகள் , பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லுமாறும் செல்லுமாறு அறிவுறுத்தினர். தென் மாவட்டங்களில் இருந்து இன்று சென்னை வந்த ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு செல்லாமல் கிளாம்பாக்கம் செல்லுமாறு அறிவிக்கப்பட்டது. இதனால் பேருந்து ஓட்டுநகர்கள், பயணிகள் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பயணிகள் பெரும் தொல்லைகளுக்கு ஆளாகினர். தமிழ்நாடு அரசு காவல்துறை மூலம், தனியார் பேருந்துங்களை அங்கிருந்து வெளியேற்றியதுடன், பயணிகளையும் விரட்டி அடித்தனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க உரிமை யாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய தயார் என கூறியதுடன், தற்போதுள்ள பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்த வசதி இல்லை என்ற கூற்று தவறு , அங்கு ஒரே நேரத்தில் 5 நடைமேடைகளில் 77 ஆம்னி பேருந்துகளை இயக்க வசதி உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மேலும் 170 பேருந்துகள் நிறுத்தும் அளவுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.