சென்னை: சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தற்போது புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 75ஆயிரம் போலீசாரை டிஜிபி சைலேந்திரபாபு களத்தில் இறங்கிவிட்டு, மீட்பு பணிகள் மற்றும் மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றதழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குளாகி உள்ளது. இன்று முதல் 12 தேதி வரை கனமழை மற்றும் புயல் காரணமாக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், மீட்பு பணிகளில் தமிழக காவல்துறையும் களமிறங்கி உள்ளது. மாநிலம் முழுவதும இன்று முதல் 12 தேதி வரை கனமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 75ஆயிரம் போலீசார் களமிறங்கி உள்ளனர்
அதன்படி, மாநிலம் முழுவதும் த்தாயிரம் பேர் விசேஷ உயிர் காக்கும் பயிற்சி எடுத்தவர்கள் உடன் காவல் நிலைய அதிகாரிகள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படை காவலர்கள், தமிழ்நாடு ஊர்க்காவல் படை என சுமார் 75 ஆயிரம் பேர் மீட்புப் பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், 250பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புப்படை, மீட்புப் படகுகள், மரம் வெட்டும் கருவிகள் மற்றும் சுவர் துளைக்கும் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். பத்தாயிரம் ஊர்க்காவல் படை வீரர்கள் மாநிலம் முழுவதும் காவல் துறையினரோடு இணைந்து செயல்பட தயார் நிலையில் உள்ளனர்.
10 மிதவை படகுகள் மற்றும் 364 பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற ஊர்க்காவல் படையினர் நீர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.