சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 7200 பட்டாசு கடைகளுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது என தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் 890 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் கட்டாயம் இடைவெளி இருக்க வேண்டும் என்ற 30 விதிகளை தீயணைப்பு துறை வழங்கி உள்ளது. அதேநேரம் கட்டுப்பாடுகளை மீறினால் பட்டாசு கடைகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று தீயணைப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்க 2மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கியுள்ள தமிழ்நாடு அரசு, பட்டாசு கடை அமைக்க அனுமதி தருவதில் இழுத்தடித்து வந்தது. மேலும், தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது சர்ச்சையானது. கடந்த காலங்களில், 3 மாதங்களுக்கு முன்பே பட்டாசுக் கடை அமைக்க ஆய்வு செய்து காவல் துறையும், தீயணைப்புத் துறையும் தடையில்லா சான்றிதழ் வழங்கிவிடும். இதனால், வியாபாரிகள் தீபாவளிக்காக பட் பட்டாசு ஆர்டர், கடைக்கு வாடகை என அனைத்துப் பணிகளும் முடித்து விற்பனைக்கு தயாராக இருப்பார்கள். இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு 7,200 பட்டாசு கடைகள் அமைக்க தீயணைப்பு துறை அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் 890 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி கடைகள் அமைக்க வேண்டும். கடைகளில் தீயணைப்பு சாதனங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் கட்டாயம் இடைவெளி இருக்க வேண்டும் என்ற 30 விதிகள் தீயணைப்பு துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த 30 விதிகளை முறையாக பின்பற்றி பட்டாசு கடைகள் அமைக்க முன் வரும் நபர்களுக்கு மட்டுமே கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படும் என தீயணைப்பு துறை தெரிவித்திருந்தது.
அதன்படி விண்ணப்பத்தில் பட்டாசு கடைகள் அமைக்கும் இடத்திற்கு தீயணைப்பு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். AD 7200 கடைகளுக்கு அனுமதி: தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாசு கடைகள் அமைப்பதற்கான மனுக்கள் மாவட்ட வாரியாக பெறப்பட்டன. அதனை தீயணைப்பு அலுவலர்கள் ஆய்வுக்கு பிறகு பாதுகாப்பு கருதி மொத்தம் 7,200 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் மட்டும் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதனை ஆய்வு செய்த பிறகு 890 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . பட்டாசு கடைகள் விதிகளை மீறினால் பட்டாசு கடைகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று தீயணைப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பட்டாசு கடைகள் முறையாக விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அப்படி விதிமுறைகளை கடைப்பிடிக்காத பட்டாசு கடைகள் மீது புகார்கள் வந்தால் உடனே பட்டாசு கடைக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்று தீயணைப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளால் ஏதேனும் தீ விபத்து நடந்தால், அவற்றை தடுக்க 42 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக மாவட்டங்களில் இருந்து 26 வாகனங்கள் சென்னைக்கு வரழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 8,000 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சென்னையில் 900 பேர் பணியில் ஈடுபடுவார்கள்.
வரும் 11 முதல் 13ம் தேதி வரை தீயணைப்பு வீரர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் அதற்கான உத்தரவுகளை தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் 500 கடைகளுக்கும், தமிழ்நாடு முழுவதும் 6,563 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரம் பட்டாசு கடைகளுக்கு தீயணைப்புத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.