சென்னை

தூத்துக்குடியிலும் வட சென்னையைப் போல் நிலக்கரி காணாமல் போனதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக மின் வாரியத்துக்குச் சொந்தமாகப் பல அனல் மின் நிலையங்கள் உள்ளன.  சமீபத்தில் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வடசென்னை அனல் மின் நிலையத்தில் சுமார் 2.38 டன் நிலக்கரி மாயமானதாகத் தெரிவித்தார்.  இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் 71,857 டன் நிலக்கரி காணவில்லை எனச் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளது அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

இது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, “சமீபத்தில் இந்திய மரபு சாரா எரிசக்தி நிறுவனத்துடன், 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 20 ஆயிரம் மெகாவாட் சூரியசக்தி மின்சாரம்; 3,000 மெகாவாட் நீரேற்று மின்சாரம்; 2,000 மெகாவாட் எரிவாயு மின்சாரம் தயாரிக்கப்படும். தற்போது மின்வாரியத்தின் மொத்த கடன், 1.52 லட்சம் கோடி ரூபாய். தமிழக அரசின் கடனில் இது மூன்றில் ஒரு பங்கு ஆகும். இதற்கு ஆண்டுதோறும், 16 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டப்படுகிறது.

இந்த வட்டி விகிதம் 9.50 சதவீதம் துவங்கி 13.5 சதவீதமாக உள்ளது. வாரியத்தைச் சீர் செய்ய அதிக வட்டி கொடுத்து கடன் பெறவேண்டிய அவசியம் இல்லை. மாறாக மக்களிடம் இருந்து வரக்கூடிய வருவாயை வைத்து, மின்வாரியத்தை மேம்படுத்த முடியும். மின் வாரியம் நிர்வாகத்தைச் சீர் செய்யாமல் விட்டதால் இழப்பைச் சந்தித்துள்ளது. சமீபத்தில் வடசென்னை மின் நிலையத்தில் ஆய்வு செய்த போது, 2.38 லட்சம் டன் நிலக்கரியைக் காணவில்லை. இதற்காக இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவு வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன், இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதால்  இந்தக் குழு எந்த ஆய்வுக்கும் செல்லவில்லை. இந்த  குழு அமைக்கப்பட்டு நடந்த முதற்கட்ட ஆய்வில், வடசென்னையில் 2.38 டன்; தூத்துக்குடியில் 71 ஆயிரத்து, 857 டன் நிலக்கரி காணவில்லை என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வுக்குழுவின் இறுதி அறிக்கை வந்தபின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.:” எனக் கூறி உள்ளார்.