சென்னை:
ந்தியாவின் 70வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார். அப்போது  சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் 12000 ஆயிரமாகவும், அவர்களின் குடும்ப ஓய்வூதியம் 6000 ரூபாயகவும்  உயர்த்தப்படும் என்று அறிவித்ததார்.

 
முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய சுதந்திர தின உரை:
“70-வது விடுதலைத் திருநாளை நாம் கொண்டாடும் இந்த வேளையில், பட்டொளி வீசிப் பறக்கும் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உங்கள் முன் உரையாற்றுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை நல்கிய எனது அருமை தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாருக்குள்ளே நல்ல நாடாகிய நம் பாரத நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்ட போது, ஆங்கிலேயர்களுக்கு எதிராக தன்னலம் கருதாது போராட்டங்கள் நடத்தி, அடிபட்டு, உதைபட்டு, ரத்தம் சிந்தி, இன்னுயிரை புன்னகையுடன் அர்ப்பணித்த விடுதலை போராட்ட வீரர்களை, வீராங்கனைகளை, நினைவு கூறும் நாள் இந்த சுதந்திரத் திருநாள்.
இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டதில் தமிழகத்தின் பங்கு கணிசமானது.
சுதந்திரம் அடைவதற்கு கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள செங்கோட்டையில், கொடிமரத்திற்கு கீழே பாரத மாதாவின் படத்தை வைத்து, கொடிமரத்தின் மேல் பாரத மாதாவின் கொடியை ஏற்றி வைத்ததோடு, “நமது செங்கோட்டையில் பறக்கும் பாரத மாதாவின் கொடியானது சீக்கிரத்திலேயே பாரத தேசமெங்கும் வெற்றிக் கொடியாக பறக்க வேண்டும்”, என்று வீர முழக்கமிட்டவர் தீர்க்கதரிசி வீரர் வாஞ்சிநாதன். டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடி பறப்பதற்கு 35 ஆண்டுகள் முன்பே நம் செங்கோட்டையில் தேசியக் கொடியை பறக்க வைத்த பெருமை தியாகி வாஞ்சிநாதனையே சாரும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தை, மிகத் தீவிரமாக அடக்கிய அப்போதைய திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றதோடு, தன்னுயிரையும் மாய்த்துக் கொண்டு, உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கையை தட்டி எழுப்பியவர் வீரன் வாஞ்சிநாதன்.
தமிழ்நாட்டில் சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்தவர்கள் என்று எடுத்துக் கொண்டால், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய பாரதி, சுப்ரமணிய சிவா, முத்துராமலிங்கத் தேவர், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, மாவீரன் அழகுமுத்துக்கோன், பூலித்தேவர், தியாகி விஸ்வநாத தாஸ், மருது சகோதரர்கள், தீரர் சத்தியமூர்த்தி, மார்ஷல் நேசமணி, வேலு நாச்சியார், அவரது படைத் தளபதி குயிலி, தில்லையாடி வள்ளியம்மை, கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் என சொல்லிக் கொண்டே போகலாம்.
ரத்தம் சிந்தி, பொருள் இழந்து, சிறையிலே அடைக்கப்பட்டு, பலவித இன்னல்களுக்கு உள்ளாகி தம் வாழ்வையே துறந்த தியாகிகளால் கிடைக்கப் பெற்ற சுதந்திரத்தை தான் நாம் இன்று அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். விடுதலை போராட்டத்தில் பலவித துன்பங்களுக்கு உள்ளான அனைவருக்கும், வீரவணக்கத்தினை செலுத்தும் நாள் இந்த சுதந்திரத் திருநாள்.
சுதந்திரம் என்பது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம், நம்மை நாமே, ஆட்சி செய்யும் சுதந்திரம் என்பதோடு மட்டும் நின்று விடுவதல்ல. உண்மையான சுதந்திரம் என்பது பொருளாதார சுதந்திரத்தில் தான் உள்ளது, அனைவரும் சமம் என்ற நிலையில் தான் உள்ளது. இதைத் தான் மகாகவி பாரதியாரும்,
“ஏழை என்றும் அடிமை என்றும், எவரும் இல்லை
சாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே” என்று உண்மையான சுதந்திரத்தைப் பற்றி, எடுத்துச் சொல்லியுள்ளார்.
cm
சிறந்த கல்வியே தனி மனித வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், அடித்தளமாக அமையும் என்பதால் தான், கல்வி வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவத்தை எனது தலைமையிலான அரசு அளித்து வருகிறது.
மாணாக்கர்கள் கல்வி கற்க தூண்டுகோலாக, மதிய உணவு முதல் மடிக்கணினி வழங்கும் திட்டம் வரை பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், காலத்தே ஆசிரியர்கள் நியமனம் செய்திடவும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.
உயர் கல்விக்கும் எனது தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 62 புதிய கல்லூரிகள் மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப பயிலகம், தேசிய சட்டப் பள்ளி ஆகியவை துவக்கப்பட்டுள்ளன. எனவே தான், அனைத்து மாநிலங்களிலும் முதன்மை மாநிலமாக உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை 44.8 சதவீதம் என தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.
நல்ல உடல் நலன் பெற்றுள்ளவரே, பொருளாதார சுதந்திரத்தை முழுமையாக துய்க்க முடியும் என்பதால் உடல் நலன் பேணுவதற்கான பல்வேறு புதிய திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், மகப்பேறு நிதி உதவித் திட்டம், கிராமப்புற வளரிளம் பெண்களுக்கு, விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவி ஆகிய திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. எனவே தான், நல்வாழ்வு குறியீடுகளில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
மக்களின் பொருளாதாரம் மேன்மை அடைய வேண்டும் என்பதால் முதன்மைத் துறை, தொழில் துறை, சேவை துறை என அனைத்து துறைகளும் மேம்பாடு அடைவதற்கான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
விவசாயிகள் வாழ்வு வளம் பெறவும், உணவு உற்பத்தி பெருகவும், தேவையான முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே தான், உணவு தானிய உற்பத்தியில் ஆண்டு தோறும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறோம். கடந்த ஆண்டு, இது வரை இல்லாத உயர் அளவாக, ஒரு கோடியே 30 லட்சம் மெட்ரிக் டன் என்ற உற்பத்தி அளவை தமிழ்நாடு எட்டியுள்ளது.
தேவையான மின்சாரம், சிறந்த உட்கட்டமைப்பு, பொருளாதார சூழ்நிலை, தொழிலாளர் திறன், எளிமையான வழிமுறைகள் ஆகியவை உள்ள காரணத்தால் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. பெரிய தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் துவங்கப்பட்டுள்ளன.
images
சுதந்திர போராட்ட வீரர்களை நினைத்துப் பார்க்கும் இந்த வேளையில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 11,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாகவும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும், குடும்ப ஓய்வூதியம் 5,500 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது மட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு நாட்டிற்காக குறிப்பிடத்தக்க வகையில் சிறப்புற பணியாற்றியவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களது வாரிசுதாரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ஓய்வூதியம் 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக, உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”
இவ்வாறு முதல்வர் பேசினார்.