சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 70 சதவீத ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தால் கல்வித்தரம் எப்படி உயரும்? என பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில்,  நடப்பாண்டில் மேலும் 20 சதவிகிதம் வரை மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.  அதன்படி, முதலாம் ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர். நடப்பாண்டில் முதலாம் ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் ஏறத்தாழ 70 சதவீதம் ஆகும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் பணி இடங்களிலேயே கிட்டத்தட்ட 70 சதவீத இடங்கள் காலியாக இருக்கும் போது, அரசு கலைக் கல்லூரிகளின் மாணவர்களுக்கு தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் 51.40 விழுக்காட்டுடன் தமிழகம் முதலிடத்தில் இருப்பது உண்மை. ஆனால், இந்தப் பெருமை மட்டுமே போதாது.

அரசு கல்லூரிகளின் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். இதற்கு வசதியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணி இடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பும் போது 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.