பெரியவர்கள் துணையின்றி 700 இந்திய சிறுவர்கள் அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்றதாக கடந்த ஓராண்டில் கைது.
303 இந்திய பயணிகளுடன் ஆள்கடத்தல் தொடர்பாக பிரான்ஸ் நாட்டில் விமானம் சிறைபிடிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பது அதிகளவு பேசப்படுகிறது.
8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்களை மட்டுமே குறிவைத்து அவர்களுக்கு அமெரிக்காவுக்குள் ஊடுருவ தேவையான வழிமுறைகள் மற்றும் பயிற்சி வழங்கி கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோரை அனுப்பி பணம் பார்த்து வருகிறது ஒரு சட்டவிரோத கும்பல்.

விவசாய கூலித்தொழிலாளிகளாகவும், வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கும் உள்ள வெளிநாட்டு கனவை ஆசைவார்த்தைகள் மூலம் ஊதிப் பெரிதாக்கும் இந்த இடைத்தரகர்கள் அவர்களை நேரடியாக அமெரிக்கா, கனடாவுக்கு அழைத்துச் செல்லாமல் அதன் அண்டை நாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து எல்லை வழியாக ஊடுருவ செய்கின்றனர்.
இந்தியாவில் இருந்து செல்பவர்களில் பெரும்பாலோனர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர் இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் ஏஜெண்டுகள் அமெரிக்கா மற்றும் கனடாவில் இதேபோன்று சட்டவிரோதமாக செயல்படும் கும்பலுடன் கைகோர்த்து இந்த காரியத்தில் ஈடுபடுகின்றனர்.
இதற்காக நபர் ஒன்றுக்கு 3000 முதல் 4000 டாலர் செலவிடும் இந்த ஏஜெண்டுகள் அவர்களை அமெரிக்கா அல்லது கனடாவில் கொண்டு சேர்த்தவுடன் நபர் ஒன்றுக்கு 40 முதல் 60 லட்சம் ரூபாய் வரை அவர்களின் வேலைக்கு ஏற்ப வட்டியும் முதலுமாக கறந்து விடுகின்றனர்.
2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை 96,917 இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 30,010 பேர் கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததாகவும், 41,770 பேர் மெக்ஸிகோ வழியாக நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காவல்துறையிடம் பிடிபடாமல் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை இதைவிட கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு பிடிபட்ட இந்தியர்களில் 700 பேர் சிறுவர்கள் என்றும் இவர்களுடன் பெரியவர்கள் யாரும் வரவில்லை என்றும் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]