டில்லி

நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நடந்த தாக்குதலை முன்னிட்டு 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அவர்கள் பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்த அந்த நபர்கள், கண்ணீர்ப் புகைக் குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசி அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது .

அந்த இருவரும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

அதே வேளையில் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, பாதுகாப்புப் பணியாளர்கள் 7 பேரை பணியிடை நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.  இந்த நடவடிக்கை மக்களவை பாதுகாப்பில் கவனக்குறைவு மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி கூடுதல் பாதுகாப்புடன் நாடாளுமன்றம் மீண்டும் கூடி நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு அவைக்குள் உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் அவையில் படும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் அவையில் கூச்சலும் குழப்பமுமாக உள்ளது.