திருவனந்தபுரம்: நாடு முழுவதும் 18வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தலை புறக்கணிக்க கோரி மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுக்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சத்திஸ்கர் மாநிலத்தில், தேர்தலுக்கு எதிராக கிரா மக்களை மிரட்டிய நக்சலைட்டுகளை காவல்துறையினர் வேட்டையாடினர். இதில், 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதுபோல, கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள கிராமங்களில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என நக்சல்கள் மிரட்டிய நிலையில், இன்று கேரள மாநில அதிரடிப்படையிருக்கும் மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் கேரள மாநில எல்லை பகுதியில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகள் 4 பேர் அங்குள்ள மக்களை தேர்தலை புறக்கணிக்கும் படி மிரட்டினர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், மாவோயிஸ்டுகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த நிலையில், இன்று பகல் கம்பமலை பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிரடிப்படையினர் அங்கு விரைந்தனர். அவர்களை பார்த்ததும், மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனை தொடர்ந்து தண்டர்போல்ட் அதிரடிப்படையினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி சுட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் யாரும் சிக்கினார்களா? என்பது பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
இதற்கிடையில், சத்திஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மோதலில், 7 நக்சலைட்டுக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா உள்பட சில மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையில், அவர்களை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வேட்டையாடி வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்குள்ள நாராயணன்பூரி, கன்கேர் மாவட்ட எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு சென்றனர். அப்போது நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே வனப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பெண் உள்பட 7 நக்சலைட்டுகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அங்கிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பகுதியில் தொடர்ந்து நக்சலைட்டுகள் வேட்டை நடந்து வருகிறது.