சென்னை: தமிழகத்தில் நாளை, 50 ஆயிரம் இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசி 100 கோடி டோசை தாண்டி சாதனை படைத்துள்ளது.  மொத்தமுள்ள 130 கோடி மக்களில் 70 சதவீதம்பேர், 18 வயதை கடந்தவர்கள். அவர்களில் பெரும்பாலோனோர் ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு சராசரியாக, 2.72 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதுவரை, 5 கோடியே 40 லட்சத்து 8,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 68 சதவீதம் பேருக்கு முதல் தவணையும்; 28 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து, அசைவ பிரியர்களுக்காக இந்த முறை வரும் சனிக்கிழமை (23ந்தேதி)  6வது மெகா தடுப்பூசி  முகாம் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் சுமார், 50 ஆயிரம் இடங்களில் இந்த முகாம் நடக்கிறது. இதில் இரண்டாவது தவணை தடுப்பூசி போடாமல் இருக்கும் 57 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இருவகையான தடுப்பூசிகளையும் முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் 2-வது தவணை செலுத்த தவறியவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைபேசி எண்ணுடன் அருகில் உள்ள முகாமிற்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் 12-ந்தேதி முதல் தற்போது வரை நடைபெற்ற 5 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம், 200 வார்டுகளிலும் தடுப்பூசி மையங்களின் வாயிலாக 36 லட்சத்து 14 ஆயிரத்து 747 முதல் தவணை தடுப்பூசிகள், 20 லட்சத்து 71 ஆயிரத்து 455, 2-வது தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 56 லட்சத்து 86 ஆயிரத்து 202 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  தனியார் ஆஸ்பத்திரிகளின் மூலமாக மொத்தம் 71 லட்சத்து 19 ஆயிரத்து 870 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மீண்டும் நாளை 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 6-வது தீவிர தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களின் மூலம் சுமார் 2½ லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 600 டாக்டர்கள், 600 நர்சுகள் உட்பட மொத்தம் 16 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட உள்ளனர். எனவே,  இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்களும், 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களும் மாநகராட்சியின் சிறப்பு முகாம்களில் பங்குபெற்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.