சென்னை: விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் தமிழ்நாடு அணி தொடர்ந்து ஆறாவது வெற்றியைப் பெற்று ‘சி’ பிரிவில் 24 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

திரிபுரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 187 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி.

அபினவ் முகுந்த் 84 ரன்களையும், அபராஜித் 87 ரன்களையும் அடிக்க, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களை எடுத்தது தமிழ்நாடு அணி.

பின்னர் களமிறங்கிய திரிபுரா அணி, 34.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்மூலம் தமிழ்நாடு அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தமிழ்நாடு அணி சார்பில் டி.நடராஜன் 3 விக்கெட்டுகளையும், எம்.அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

திரிபுரா சார்பில், பிரத்யூஷ் சிங் மற்றும் மிலிந்த் குமார் ஆகியோர் தலா 24 ரன்களை அடித்த தங்கள் அணிக்கான பெரிய பங்களிப்பை அளித்தனர்.