திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 27ந்தேதி  கொடியேற்றுத்துடன் தொடங்கியது. 10நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. டிசம்பர் 6ந்தேதி மகாதீபத்துடன் தீபத்திருவிழா முடிவடைகிறது. 6-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்படும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகறது.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அறிவித்து இருந்தார். மேலும், மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்றுமுதல் (டிசம்பர் 2ந்தேதி) டிசம்பர் 7ந்தேதி வரை 6 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக அறிவித்து உள்ளர். அதன்படி,  திருவண்ணாமலை நகரில் காமராஜர் சிலை, வேங்கிக்கால் ஏரிக்கரை, புறவழிச்சாலை, நல்லவன்பாளையம் மற்றும் திருவண்ணாமலை நகரின் உள்பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்களுடன் இணைந்த ஹோட்டல்களான திரிசூல், நளா, அஷ்ரேய்யா, அருணாச்சலா, வேங்கிக்கால் பகுதியில் இயங்கி வரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி மதுக்கடைகள் ஆகிய அனைத்திற்கும் இன்று முதல் டிச.7 ஆம் தேதி வரை 6 நாட்கள் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.