சென்னை,
69வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் தலைநகர் சென்னை மெரினாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின அணிவகுப்புகளை பார்வையிடுகிறார்.
இந்த வண்ணமிகு விழாவில், அவருடன் தமிழக முதல்வர், துணைமுதல்வர் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.
சென்னை மெரீனா கடற்கரை ஐஜி அலுவலகம் எதிரே உள்ள சாலையில் இன்று காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள், சபாநாயகர் தனபால், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உயரதிகாரிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
தேசிய கொடி ஏற்றப்பட்டதும் தாழ்வாகப் பறக்கும் ஹெலிகாப்டர் மலர்களைத் தூவும். தேசிய கீதம் பேண்டு வாத்தியத்துடன் முழங்க அனைவரும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துவார்கள்.
அதைத் தொடர்ந்து ராணுவப்படை, விமானப்படை, கடற்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெறும். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் செயற்கைக்கோள் ஆகியவற்றின் மாதிரிகள் இந்த அணிவகுப்பில் இடம்பெறும்.
அணிவகுப்பு முடிந்ததும் வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வழங்குவார்.
பின்னர் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
குடியரசு தின அணிவகுப்பை முன்னிட்டு கடற்கரை சாலையில், போக்குவரத்து திருப்பி விடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம், சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.