மைசூரு:

ர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது,  விநாடிக்கு 69,000 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர்  மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 35,000 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.

கடந்த மாதம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனத்த மழை பெய்ததால் விநாடிக்கு ஒருலட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், மழை குறைந்ததும் தண்ணீர் திறப்பையும் கர்நாடக அரசு குறைத்து வந்தது.

தற்போது மீண்டும் அங்கு மழை பெய்து வருவதால்,  கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ள இந்த அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை  மீண்டும் அதிகரித்து உள்ளது.

தற்போது விநாடிக்கு 69,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினியில் இருந்து நொடிக்கு 20,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ்-சில் இருந்து நொடிக்கு 49,000 கன அடி நீரும் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.