சென்னை: கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை 648 கோடி செலவில் பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளதாக இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மிக முக்கிய திட்டமாக அம்மா உணவகம், மாநகராட்சி நடுநிலை பள்ளிகளில் மத்திய உணவு மற்றும் சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்கும் திட்டம் போன்றவை இடம்பெற்றுள்ளது.
வடசென்னையில் அமைந்துள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கு சுமார் 300 ஏக்கர் அளவிலானது. இங்கு நாளொன்றுக்கு சுமார் 5200டன் குப்பைக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதில் பிரதானமாக, குப்பைக் கழிவுகள் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்கும் பெருங்குடி குப்பைக் கிடங்கிற்கும் கொண்டு செல்லப்படுகிறது. நீண்ட காலமாக கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளால் நிலத்தடியில் ரசாயன தன்மை அதிகரித்தும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் நிலை உள்ளது.
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தேங்கி கிடக்கும், 30 ஆண்டுகால குப்பையை, ‘பயோ மைனிங்’ முறையில் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 700 கோடி ரூபாயில் திட்ட அறிக்கை தயாரித்து, அதை அமல்படுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. அதன்படி, திடக்கழிவுகள் மக்கும், மக்காத கழிவுகளாக பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யும் வகையில் பதனிடும் மையங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், மீதமுள்ள கழிவுகள், பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. இதில், 225 ஏக்கர் பரப்பளவுடைய பெருங்குடி குப்பை கிடங்கில், 34.02 லட்சம் கன மீட்டர் அளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. அங்கு, ‘பயோ மைனிங்’ முறையில், 350.65 கோடி ரூபாய் செலவில், குப்பையை தரம் பிரிக்கும் பணி, 11 உயிரி அகழ்ந்தெடுக்கும் மையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திரந்தார்.
இதையடுத்து, பெருங்குடி குப்பை கிடங்கை தொடர்ந்து, வடசென்னை மக்களின் நீண்டகால கோரிக்கையான கொடுங்கையூர் குப்பை கிடங்கும், ‘பயோ மைனிங்’ முறையில் அகழ்ந்தெடுக்கப்படும் என, 2022 – 23 தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை பயோ மைனிங் முறையில் கையாளவும், கிடங்கை மறுசீரமைத்து நிலத்தை மீட்டெடுக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது என்று இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலை மற்றும் ஐஐடி வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனைகளின் படி திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு கொடுங்கையூர் குப்பை கிடங்கு பயோ மைனிங் திட்டத்திற்கு 648 கோடி ரூபாய் செலவில் மொத்தம் ஆறு தொகுப்புகளாக செயல்படுத்தப்பட இருப்பதாகவும், மத்திய அரசு நிதியாக 25% 160 கோடி ரூபாயிலும், மாநில அரசு 16 சதவீதம் 102 கோடி செலவிலும் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 59 சதவீதம் 378 கோடிய என ஒட்டுமொத்தமாக 648.83 கோடி ரூபாயில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் 251.9 ஏக்கர் பரப்பளவில் உள்ள 64 ஆயிரம் டன் எடையுள்ள குப்பைகள் பயோ மைனிங் செய்வதற்கு தமிழக அரசிடம் ஒப்புதல் பெறும் தீர்மானம் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.