புதுடெல்லி: வெளிநாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படும் சுமார் 14,800 இந்தியர்களை மீட்டுவர, சுமார் 64 விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 200 முதல் 250 நபர்கள் வரை ஏற்றி வரும் வகையில் இடவசதியுள்ள அந்த விமானங்கள், மே 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 12 நாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்டுவரும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
முதல் வாரத்தில், 15 விமானங்கள் கேரளாவுக்கும், 11 விமானங்கள் தமிழ்நாட்டிற்கும், 7 விமானங்கள் தெலுங்கானாவுக்கும், 3 விமானங்கள் கர்நாடகாவுக்கும் இயக்கப்படவுள்ளதாம்.
மேலும், இந்தப் பணியில் கடற்படை கப்பல்களும் ஈடுபடவுள்ளன. இந்திய அரசின் சார்பில் மாலத்தீவுகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஐஎன்எஸ் ஜலஷ்வா மற்றும் ஐஎன்எஸ் மகர் ஆகிய கப்பல்கள் மாலத்தீவுகளுக்கும், ஐஎன்எஸ் ஷர்துல் என்ற கப்பல் வளைகுடாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த 3 கப்பல்களும் கொச்சியை வந்தடையும் என்று கூறப்படுகிறது. அதேசமயம், தாய்நாட்டிற்கு மீட்டுக் கொண்டுவரும் செயல்பாடு, கட்டணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.