சென்னை: ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணி பெற்ற 636 பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆவின் பால் விலையை குறைத்த பிறகு, ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது. இதைத்தொர்ந்து பால் கொள்முதல் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆவின் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு வரும், ஆவின் பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியில், ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக 636 பணியிடங்களில் நியமனங்கள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இனிமேல் அந்தப் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலமாக தேர்வு நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.