சென்னை

கொரோனாவுக்கு முன்பு பயணித்தோரில் 60% பேர் மீண்டும் சென்னை மெட்ரோ ரயிலுக்குத் திரும்பி உள்ளனர்.

சென்னையில் சாலைப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது.  சென்னை மெட்ரோ ரயிலில் பல தொழில் நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் போன்றவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.     இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாகச் சென்னை மெட்ரோ ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.

அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து மீண்டும் சேவைகள் தொடங்கப்பட்டது.   ஆயினும் முன்பு இருந்த அளவு கூட்டம் காணப்படவில்லை..   சிறிது சிறிதாக மெட்ரோ ரயில் சேவை நேரம், அதிகரிக்கப்பட்டது.   மேலும் பல தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அதிக ஊழியர்களுடன் இயங்கத் தொடங்கியது.  இதையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கொரோனாவுக்கு முன்பிருந்த பயணிகள் எண்ணிக்கையில் 41% பேர் கடந்த ஜூன் மாதம் முதல் மீண்டும் பயணிக்கத் தொடங்கினர்.  அதன் பிறகு ஜூலை மாதம் அது 60% ஆக அதிகரித்துள்ளது.  மீண்டும் சேவை தொடங்கிய ஜூன் 16 முதல் ஜூலை 16 வரையிலான காலகட்டத்தில் 12.8 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

கொரோனாவுக்கு முன்பு சென்னை மெட்ரோ ரயிலில் தினசரி 1.16 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர்.   ஜூலாஈ 18 அதாவது இன்று முதல் ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  எனவே விரைவில் பயணிகள் எண்ணிக்கை முழு அளவில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.