பெங்களூரு:

அணிகள் இணைப்பு குறித்து 60 நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என சசிகலா அறிவுரை கூறி உள்ளதாக தினகரன் தெரிவித்தார்.

டி.டி.வி. தினகரன் சசிகலாவை சந்திப்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து கார் மூலம் பெங்களூரு புறப்பட்டார். இன்று பிற்பகலில் அவர் சசிகலாவை சந்தித்து பேசினார்

தினகரனுடன், வெற்றிவேல், இன்பதுரை, பார்த்தீபன், தங்க தமிழ்செல்வன், ஜக்கையன், கதிர்காமு உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் சென்றனர்.

மூன்று எம்.பி.க்கள் மற்றும் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன், கதிர்காமு உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்கள், கர்நாடக அதிமுக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோருடன் தினகரன் தனது மனைவி அனுராதா ஆகியோருடன் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார். அங்கு சசிகலாவை தினகரன் தனது மனைவியுடன் சென்று சந்தித்தார்.

மற்றவர்கள் சிறை வளாகத்தில் காத்திருந்தனர். தமிழக அரசியில் நிலவரங்கள் குறித்து தினகரன் சசிகலாவிடம் எடுத்துரைத்தார். பின்னர் அவர் கூறும் அறிவுரைகளை கேட்டு கொண்டார்.

சசிகலாவுடனான சந்திப்புக்கு பிறகு டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னை கட்சியில் இருந்து ஒதுங்க சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரமில்லை. அமைச்சர்கள் தங்கள் சுயபயத்தால் நாங்கள் விலகவேண்டும் என கூறுகிறார்கள்.

கட்சியில் இருந்து என்ன நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. 45 நாள் நான் ஒதுங்கியிருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை இரு அணியினரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிவருவதால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. கட்சி இணைப்பு குறித்து 60 நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என சசிகலா அறிவுரை கூறி உள்ளார்.

கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டால் 60 நாட்கள் கழித்து கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவேன். அமைச்சர்களுக்கு யார்மீது பயம் உள்ளது எனபதை காலம் தெளிவுபடுத்தும். கட்சியை விட்டு என்னை நீக்கும் அதிகாரம் ஜெய்குமாருக்கு யார் கொடுத்தது. இவ்வாறு அவர் கூறினார்.