சிகாகோ: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண ஆளுநர் கிரெட்சன் விட்மெரை கடத்தி, அதன்மூலம் அம்மாகாண அரசை வன்முறை மூலமாக கவிழ்ப்பதற்கு திட்டமிட்டதற்காக, மொத்தம் 6 நபர்களின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மிச்சிகன் மாநிலத்தில் கொரோனா கால கெடுபிடிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. இதற்கு, சில வலதுசாரி குழுக்கள் ஆட்சேபம் தெரிவித்தன. கடந்த ஏப்ரல் மாதத்தில், உள்ளூர் ஆயுதப் போராளிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மிச்சிகன் கேபிடலை முற்றுகையிட்டனர்.
இந்தப் போராட்டத்தை ஆதரித்தார் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட விமர்சனத்தை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுதம் தாங்கிய குழுக்களின் வன்முறைகள், கடந்த மாதங்களில் கவலைகளை அதிகரிப்பதாக அமைந்தன. தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள், எப்படி தங்களை ஒருங்கிணைத்து செயல்படுகிறார்கள் என்பதை, அந்த ஆட்சிக் கவிழ்ப்பு திட்டம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்கள் சம்பந்தப்பட்ட வட்டாரத்தினர்.
ஆடம் ஃபாக்ஸ், பேரி கிராஃப்ட், டை கார்பின், காலெப் ஃபிரான்க்ஸ், டேனியல் ஹாரிஸ் மற்றும் பிராண்டன் காசர்டா ஆகியோர்தான் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள்.