சென்னை: நீதிபதிகளை விமர்சித்த பிரபல பத்திரிகையாளர் மற்றும்  யுடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்படுகிறார்.

 ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என  பத்திரிகையாளரும், டியுயூபருமான சவுக்கு சங்கர் தனது பேசியிருந்தார். கடந்த ஜூலை 22 ஆம் தேதி, ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என ரெட்பிக்ஸ்  யுடியூப் சேனலில் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், நீதித்துறை மீதான பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இதையடுத்து,  சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே  விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக, சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கடந்த 8ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, நேரில் ஆஜரான சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்துபேசிய சவுக்கு சங்கர்,  தன் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக கூறப்படும் வீடியோ பதிவு அல்லது அதற்கான தட்டச்சு பதிவை வழங்க வேண்டும் என மனுவாகத் தாக்கல் செய்திருந்தார். அதோடு, இது எந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. புதிதா? பழையதா? என கேள்வி எழுப்பினார்.

 நீங்கள் பேசியது உங்களுக்கு நினைவில்லையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, நான் பல பேட்டிகளை வழங்கியுள்ளேன். அனைத்தையும் என்னால் நினைவில் கொள்ள இயலாது. கால அவகாசம் தேவை என  எகத்தாளமாக பதிலளித்தார். அதையடுத்து கால அவகாசம் தேவை என்பதை எழுத்துப்பூர்வமாக வழங்கிய சவுக்கு சங்கர் 6 வார கால அவகாசம் கோரினார்.  ஆனால் அதை ஏற்ற  நீதிபதிகள், நீதிமன்ற பதிவாளரிடம் அதன் நகல்களை சவுக்கு சங்கரிடம் வழங்க உத்தரவிட்டனர்.

மேலும் விசாரணையின்போது, சவுக்குசங்கர்,  “இது குறித்து எவ்வித பதிவையும் பதிய மாட்டேன் என உறுதி அளித்தால், கால அவகாசம் வழங்கலாம் என தெரிவித் தார். அதற்கு சவுக்கு சங்கர் தரப்பில் உறுதி வழங்க இயலாது என மறுத்தார். அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  கடந்த வாரங்களிலும், இன்றும் இந்த வழக்கு குறித்து சவுக்கு சங்கர் பேசியுள்ளார். நீதிமன்றத்தின் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் என பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 1 வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர். அதையடுத்து வழக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் தீர்ப்பை நிறுத்தி வைக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், சவுக்கு சங்கரை கைது செய்யக்கூடாது என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் அதை ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து, சவுக்கு சங்கர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சவுக்கு சங்கர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.