டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மாதந்தோறும் 6 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல் தெரிவித்து உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழ்நாடு முதல்வருமான மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்க, எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு,   ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, விசாரணை நடத்தி வந்தது. இந்த ஆணையம் 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், அப்போலோ மருத்துவர்களிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியது. ஆனால், அப்போலோ விசாரணைக்கு ஆஜராகாமல்,  விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம்,ஆணையத்தின் விசாரணைக்கும் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து தடை பெற்றது. இதனால், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் செய்லபடாத நிலை உள்ளது.

இதற்கிடையில், அப்போலோ  மனு மீதான விசாரணையின்போது, தங்கள் தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும் என தமிழக அரசு கேவியட் மனுவை தாக்கல் செய்தது. இந்த வழக்குகள் தொடர்ந்து வருகிறது. வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுசார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மாதந்தோறும் 6 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு செலவிட்டு வருகிறது என்று கூறியதுடன், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என இடைக்கால மனுவும் தாக்கல் செய்தது.

இதையடுத்து  தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு 4 வாரங்கள் கழித்து விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்து வழக்கை ஒத்தி வைத்தது.