புதுடெல்லி :

வம்பர் 14 ம் தேதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள அக்ஷர்தம் கோயிலில் லக்ஷ்மி பூஜை நடத்தப் பட்டது. இதை அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தினார்.

இந்த பூஜைக்கு ரூ. 6 கோடி செலவானதாகவும், இது அரசு கஜானாவில் இருந்து செலவழிக்கப்பட்ட பணம் என்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சமூக ஆர்வலர் சாகேத் கோகலே எழுப்பிய கேள்விக்கு தகவல் கிடைத்துள்ளது.

அக்ஷர்தம் கோயிலில் நடந்த இந்த அரை மணி நேர லக்ஷ்மி பூஜைக்கு கெஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவரும் தங்கள் மனைவியர் துணையுடன் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை தனது சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்திருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். 30 நிமிட நிகழ்ச்சிக்கு நிமிடம் ஒன்றுக்கு 20 லட்சம் செலவு செய்து நடத்தப்பட்ட இந்த லக்ஷ்மி பூஜை குறித்து சமூக வலைதளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அரசியலுக்கு வந்த சமயத்தில் தன்னை ஒரு மத சார்பற்ற தலைவர் போல் காட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது மத வழிபாட்டு கூட்டங்களில் கலந்து கொள்வது அவருக்கு வாக்களித்த பிற மதத்தை, குறிப்பாக டெல்லியில் அதிகம் வாழும் முஸ்லீம்களை உதாசீனப்படுத்துவதாக உள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையில் மசூதிகள் தாக்கப்பட்டு அனுமார் கொடிகளும், காவிக்கொடிகளும் பறக்கவிடப்பட்டது, வன்முறையில் இறந்து போன 53 பேர் குடும்பத்திற்கு இந்த பணத்தை செலவு செய்திருந்தால் அவர்களது குடும்பமாவது பிழைத்திருக்கும்.

கொரோனாவை எதிர்த்து போராடிவரும் டாக்டர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் தங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட சம்பளத்தை வழங்க போராடிவரும் நேரத்தில், இதுபோன்ற செலவுகள் எதற்கு ?

வன்முறையில், இறந்து போன குடும்பத்தினருக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்காத அரசு, கஜானாவிலிருந்து மக்கள் வரிப்பணத்தை வாரி இறைப்பது முறையா ? என்றும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.