கொல்கத்தா :

மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரி னாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் அணி அணியாக விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா, மே.வங்காள மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட அரை டஜன் எம்.எல்.ஏ.க்கள், அமீத்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

தேர்தல் நெருக்கத்தில் மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் மம்தா கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் ஐக்கியமாகலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் அந்த மாநில அமைச்சரவை கூட்டம் கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கவுதம் தேப், ரவீந்திரநாத், சந்திரநாத் சின்ஹா, மற்றும் ராஜீப் பானர்ஜி ஆகிய நான்கு அமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர்.

பா.ஜ.க.வில் அண்மையில் இணைந்த சுவேந்து அதிகாரியும், அமைச்சராக இருந்த போது, தொடர்ச்சியாக அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது மேலும் நான்கு பேர், அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்துள்ளது மே.வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– பா. பாரதி