இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கும் ஸ்நாக்ஸ் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளது ‘சமோசா’, ஒரே ஆண்டில் 50 லட்சம் சமோசா ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

2021 ம் ஆண்டு அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகள் குறித்த புள்ளிவிவரத்தை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், இந்த ஆண்டு 6 கோடி பிரியாணி பாக்கெட்டுகள் அதாவது நிமிடத்திற்கு 115 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது, கடந்த ஆண்டு இது நிமிடத்திற்கு 90ஆக இருந்தது.

பிரியாணி ஆர்டர் செய்வதில், சென்னை, கொல்கத்தா, லக்னோ, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் முன்னணியில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரியாணிக்கு அடுத்தபடியாக சமோசாவும் அதற்கு அடுத்த படியாக 21 லட்சம் ‘பாவ் பாஜி’ டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் ஸ்விக்கி, சிக்கன் பிரியாணியை விட ‘தால் கிச்சடி’-யை மும்பைவாசிகள் இருமடங்கு அதிகமாக விரும்பியதாக கூறியுள்ளது.

ஆரோக்கிய உணவை அதிகம் விரும்பும் நகரங்களில் பெங்களூரூ முன்னணியில் உள்ளது இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் மற்றும் மும்பை நகரங்கள் உள்ளன.

பகலில் இந்திய உணவுவகைகள் அதிகப்படியாக ஆர்டர் செய்யப்பட்டாலும் இரவில் பிரெஞ்சு ப்ரைஸ், பாப்கார்ன் உள்ளிட்ட நொறுக்கு தீனிகள் அதிகளவில் ஆர்டர் செய்யப்படுவதாக அந்த புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்விக்கி இனிப்பு வகையில் குலாப் ஜாமூனுக்கு தனி மவுசு இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது.