கவுகாத்தி:

விபத்துக்குள்ளான ஏ.என்.32 விமானத்தில் பயணித்த  13 வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதில் 6 வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மற்ற 7 பேரின் உடல்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக விமானப்படை தகவல் தெரிவித்து உள்ளது.

விமானப்படைக்கு சொந்த ஏ.என் 32 ரக விமானம் கடந்த 3ந்தேதி திடீரென மாயமான நிலையில், விமானம் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.  விமானத்தின் பாகங்கள் அருணாசலப்பிர தேசத்தில் உள்ள ஷியோமி மாவட்டத்து வனப்பகுதியில்  கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அதில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக விமானப்படை அறிவித்தது.

இந்த நிலையில், உயிரிழந்த வீரர்களின் 13 வீரர்களின்  உடல்களும் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 விமானம், அஸ்ஸாமில் உள்ள ஜோர்ஹாட்டில் இருந்து அருணாசலப்பிரதேசத்தில் உள்ள ஷியோமி மாவட்டத்துக்குக் கடந்த 3-ம் தேதி புறப்பட்டுச் சென்றது. பயணத்தை தொடங்கிய அரை மணி நேரத்தில், அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது.

இந்த நிலையில், மாயமான விமானத்தின் பகுதிகள்  ஷியோமி மாவட்டத்து மலைகள் நிறைந்த வனப்பகுதியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த இடம் அருணாசலப்பிரதேசத்தின் லிபோ என்ற இடத்துக்கு வடக்கில் 12,000 அடி உயரத்தில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதி என்பதால் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

தொடர்ந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மற்றும் இறந்தவர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டு வந்தன. இடையில் வானிலை காரணமாக , உடல்களை  மீட்கும் பணி தடை ஏற்பட்ட நிலையில், தற்போது, விமான விபத்தில் பலியானவர்களின் 13 பேரில் 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்ற  7  பேரின் உடல்கள் சேதம் அடைந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அதை எடுத்து வரும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.