சென்னை: அக்டோபர் 10ந்தேதி (வரும் ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும  5-வது தடுப்பூசி முகாம் நடைபெறும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சு. கூறியதாவது, தமிழகஅரசு எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக, மாநிலம் முழுவதும்  தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. அரசின்  பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்  தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதே வேளையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மக்களை கொரோனா பரவலில் இருந்து தடுக்க கடந்த செப்டம்பர் மாதம் முதல் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 19-ஆம் தேதி இரண்டாவது தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 3வது தடுப்பூசி முகாம்  செப்டம்பர் 26-ஆம் தேதியும், 4வது தடுப்பூசி முகாம் அக்டோபர் 3-ஆம் தேதியும் நடைபெற்றது.

இதனை அடுத்து  5வது தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) நடததப்பட உள்ளது. இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், சிறப்பு முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.