டில்லி
இரண்டாம் அலை கொரோனா பரவலில் 594 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்குதலில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அளவுக்கு அதிகமாக உள்ளது. உலக அளவில் இந்தியா தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் தினசரி கொரோனா மரண எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை மொத்தம் 2.83 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 3.35 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.
இவ்வாறு மரணம் அடைந்தோரில் பல அரசியல் மற்றும் திரைப் பிரமுகர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், வர்த்தக பிரமுகர்கள் எனப் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இதில் குறிப்பாக மருத்துவர்கள் நேரடியாக கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் உள்ளதால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
இந்த இரண்டாம் அலை கொரோனா பரவலின் போது இந்தியாவில் 594 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர் என இந்திய மருத்துவ சங்கம் பட்டியல் அளித்துள்ளது.
இதில் அதிக அளவில் டில்லியில் 107 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர். இரண்டாவதாகப் பீகார் மாநிலத்தில் 96 மருத்துவர்கள் உயிர் இழந்துள்ளனர். மூன்றாவதாக உபி மாநிலத்தில் 67 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 21 மருத்துவர்கள் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.
மிகவும் குறைந்த பட்சமாக பாண்டிச்சேரியில் ஒரே ஒரு மருத்துவர் மட்டும் மரணம் அடைந்துள்ளார். திரிபுரா, உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் 2 மருத்துவர்களும் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், அரியானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 3 மருத்துவர்களும் உயிர் இழந்துள்ளனர்.