சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, குறிப்பிட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 554 வழக்குகள் உட்பட சென்னையில் மொத்தம் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிக்க தடையும், பல இடங்களில் கடும் கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. அதையொட்டி மாநில அரசுகளும் பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளன. தமிழ்நாட்டில் காலை 1மணி நேரமும், மாலை 1மணி நேரமும் என 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அரசின் இந்த அறிவுறுத்தலை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தது.
இந்த நிலையில், சென்னையில் மட்டும் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக கூறி 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, சென்னையில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பட்டாசு வெடித்தது தொடர்பாக 554 வழக்குகள் உள்பட மொத்தம் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், அதிக அளவில் சத்தத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்ததாக கூறி 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதேபோல் அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவு செய்யட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சென்னையில் நேற்று இரவு வரை 100 டன் அளவில் பட்டாசு கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று இரவுக்கும் பட்டாசு கழிவுகள் முழுமையாக அகற்றப்படும் என்றும் மொத்தம் 200 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 140 இடங்களில் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்ததால் தீ விபத்தும் ஏற்பட்டது என தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 364 இடங்களில் தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. தீ விபத்தால் உள்நோயாளிகளாக 47 பேரும், புறநோயாளிகளாக 622 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக கூறி 141 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் கோவை யில் கொடுத்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.