சென்னை: தீபாவளியை கொண்டாடும் விதமாக சென்னையில் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சென்னையில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும், காறறு மாசு அதிகரித்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் காற்றுமாசு அதிகரித்து வருவதால், தலைநகர் டெல்லி உள்பட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க முழு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் சுமார் 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் விதிகளை மீறி பலர் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு கடுமையாக உயர்ந்து வருகிறது.

ன்னையில்  தீபாவளிக்கு பட்டாசு வெடித்து கொண்டாடியதால் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உயர்ந்து   காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

12ந்தேதி மாலை 4 மணி நிலவரப்படி காற்றின் தரம் 170 ஆக இருந்த நிலையில், நேற்று இரவு அதிகளவிலான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் அது தற்போது 200-ஐ கடந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316 ஆக பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக வேளச்சேரியில் 301 ஆகவும் அரும்பாக்கத்தில் 260 ஆகவும், ஆலந்தூரில் 256 ஆகவும், ராயபுரத்தில் 227 ஆகவும் பதிவாகி இருந்தது. பட்டாசு வெடிக்க அரசு சார்பில் நேரம் ஒதுக்கப்பட்ட போதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பட்டாசு வெடித்ததன் காரணமாகவே , காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, No2. s02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்துள்ளதாகவும் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் கடந்த 10ம் தேதி சென்னையில் காற்று மாசு தரக்குறியீடு 83 என இருந்த நிலையில் தற்போது 200-ஐ கடந்துள்ளதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

காற்று மாசுபாட்டின் தர குறியீடு என்பது ஒட்டுமொத்தமாக காலை 8 மணி நிலவரப்படி 256 இருப்பதாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  இது ஒருவர் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 சிகிரெட்டை புகைப்பதற்கு சமம் என்று கூறும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், இதன் காரணமாக,   மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை பாதிப்பு உள்ளிட்டவைகளால் மக்கள் பாதிக்கக்கூடும்  என தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் எங்கு பார்ப்பினும் புகை மூட்டமாக காட்சி அளிப்பதால், வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணிக்கின்றனர்.

பொதுமக்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே செல்லுவதை பெருமளவு தவிர்க்க வேண்டும் எனவும், அவ்வாறு வெளியே சென்றால் முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு முன்னர் சென்னையில் காற்று மாசு கடந்த 10-ந் தேதி நிலவரப்படி 83 ஆக இருந்த நிலையில், தீபாவளி முடிந்த பின்னர் 200-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் விடிய விடிய வாண வெடிகளை வெடித்து மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடியதே இந்த காற்று மாசு பிரச்சனைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. காற்று மாசு காரணமாக சென்னையில் சாலையெங்கும் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் அவதி அடைந்துள்ளனர். காற்றின் தரம் இந்தளவு மோசமடைந்து உள்ளதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.