வங்கிகளின் பெருந்தொகைகளை கடனாகப் பெற்றுக் கொண்டு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றும் பெரும் பண முதலைகளின் பெயர்களை ஏன் வெளியிடக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

loan_defaulters

இது தொடர்பான பொதுநல வழக்கை டெல்லியில் உச்சநீதி மன்றத்தின் நீதியரசர்கள் டி.எஸ்.தாகூர், சந்திரசுந்த் மற்றும் எல்.நாகேஷ்வரராவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இதில் 500 கோடிக்கு மேல் கடனாக பெற்றுக்கொண்டு அதை திருப்பி கட்டாமல் டிமிக்கி கொடுத்துவரும் 57 பெரும் பண முதலைகளைக் குறித்து கேட்ட நீதிபதிகள், இப்படி செலுத்தபடாமல் நிலுவையில் இருக்கும் பணம் கிட்டதட்ட 85 ஆயிரம் கோடிகள் ஆகும். இவர்களது பெயரை வெளியிடாமல் இருக்க என்ன காரணம் என்று ரிசர்வ் வங்கியை கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி செக்‌ஷன் 45இ-படி கடன்காரர்களின் பெயரை வெளியிடக்கூடாது எனவும் இவர்கள் வேண்டுமென்றே செலுத்தாமல் இருக்கவில்லை என்றது.
அந்த வாதத்தை ஏற்காத நீதிபதிகள் நீங்கள் நாட்டு நலனை கருத்தில் கொண்டு செயல்படுங்கள் வங்கிகளின் நலனை அல்ல என்று கூறினர். கடனை திருப்பி கட்டாதவர்கள் வேண்டுமென்றேதான் அப்படி செய்கிறார்கள். பல கோடிகளை கடனாக பெற்றுக்கொண்டு, பின்னர் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக காரணம் சொல்லி தப்பிக்கொள்கிறார்கள். ஆனால் பாவம் வெறும் 15,000 அல்லது 20,000 கடன் பெறும் விவசாயிகள் அதை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்படுகிறார்கள் என்றனர்.
இந்த வழக்கு விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.