சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கு காலத்தை மீறி திறந்திரந்த  75 கடைகள் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே தொற்று அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. அதிகரித்து வரும் கொரோனா காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 24-ஆம்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  ஆனால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் பலரும் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் அதிகளவில் வெளியில் சுற்றி வந்தனர். இதனால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்லவும் இ.பதிவு சேவை கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சென்றவர்களை மடக்கி காவல்துறையினர் அவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்தனர். மேலும், 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 3,422 பேர் மீதும், கவசம் அணியாமல் வெளியில் வந்த 3,518 பேர் மீதும், சென்னையில் நேற்று சமூக இடைவெளியை கடைபிடிக்காத 391 பேர் மீதும் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 75 கடைகள் மூடப்பட்டன என காவல்துறை தெரிவித்துள்ளது.