தமிழ்நாட்டில் 525 எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க மத்தியஅரசு அனுமதி!

Must read

சென்னை:

மாசு கட்டுப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கிலும், தமிழ்நாட்டுக்கு 525 எலக்ட்ரிக் பஸ்களை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.  இந்த பேருந்துகள் அனைத்தும் சென்னை உள்பட 8 நகரங்களில்  விரைவில் ஓடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

உலகம் முழுவதும் மாசு அதிகரித்து வரும் நிலையில், நமது நாட்டிலும் மாசு கட்டுப்படுத்தும் நோக்கிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் மின்சார வாகனங்கள் இயக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வரிச்சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மத்தியஅரசின் ஒதுக்கீட்டில் இருந்து மாநிலங்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளிடம் இருந்து, தேவைகளை கோரியிருந்தது. அதன்படி, மொத்தம்  14,988 பஸ்கள் வேண்டும் தேவை என மாநில அரசுகளிடம் இருந்து அறிக்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை பரிசீலித்து வந்த மத்திய அரசின் கனரக தொழில் துறை, கனரக கைத்தொழில் மற்றும் பொது நிறுவன அமைச்சகம் நாட்டின் 64 நகரங்களுக்கு 5,595 மின்சார பேருந்துகளை அனுமதித்துள்ளது. இவற்றில் 525 தமிழ்நாட்டின் எட்டு நகரங்களுக்கானவை.

மேலும். மகாராஷ்டிராவுக்கு 725 பஸ்கள், உத்தரபிரதேசதுக்கு 600ம்,  டிலியில் மெட்ரோ ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 100 பஸ்கள் இயக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளது.

இது தவிர பெருநகரங்களில் பஸ்களை இயக்கும் வகையில் தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய 8 நகரங்களில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு தலா 100 பஸ்களும், ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் ஆகிய நகரங்களுக்கு 50 பஸ்களும், தஞ்சாவூருக்கு 25 பஸ்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சென்னைக்கு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தனியாக எலக்ட்ரிக் பஸ்கள் விடப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி,  திருவான்மியூர்- சென்ட்ரல், கோயம்பேடு- பிராட்வே இடையே எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த மின்சார பேருந்துகளில்,  வழித்தடத்தை கண்காணிக்கும் ஜி.பி.எஸ். வசதி, தானியங்கி கியர், தானியங்கி கதவு, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, கண்காணிப்பு கேமரா என அனைத்து வசதிகளும் இருக்கும் என்றும்,  மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர சைக்கிளுடன் பஸ்சில் ஏறுவதற்கும் இதில் வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பேருந்துகள் இயங்க, அதனுள்  26 ரிசார்ஜபிள் பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த பேட்டரிகளை 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 150 கி.மீ. வரை இயக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article